ரூபாய் 6,445 கோடி மதிப்பில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த திட்டங்கள்!
சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ரூபாய் 6,445 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகள் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
By : Karthiga
சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் 6,151 கோடி மதிப்பில் விமான நிலையம், நெடுஞ்சாலை மற்றும் ரயில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அந்த திட்ட பணிகள் குறித்த முழு விவரம் வருமாறு:-
மதுரையிலிருந்து செட்டிகுளம் வரை 7.3 கிலோமீட்டர் தூரத்தில் ரூபாய் 251 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் மற்றும் நான்கு வழிச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த உயர்மட்ட சாலையின் கீழ் தளத்தில் 8.1 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை இருபுறமும் 7 மீட்டர் அகலத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 14 பஸ் நிறுத்தங்கள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சிறு பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த உயர்மட்ட சாலை தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட சாலை ஆகும். 5.11.2018 அன்று தொடங்கப்பட்ட இந்த உயர்மட்ட சாலை பணி தற்போது நிறைவு பெற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .
528 கோடி மதிப்பில் நத்தம் துவரங்குறிச்சி இடையே 24.4 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் . 28.2.2020 அன்று தொடங்கப்பட்ட இந்த சாலை பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த சாலையில் 11.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு மூன்று புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன .
அதாவது நத்த பகுதியில் 4.74 கிலோ மீட்டர் தூரத்துக்கும் குட்டப்பட்டி பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கும் அக்கியம்பட்டி மற்றும் பழைய பாளையம் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு வழி சாலை அகலத்திற்கு சாலையில் இருபுறமும் இணைப்புச் சாலையும், 3.7 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு வழிச்சாலை அகலத்திற்கு சாலையின் இருபுறமும் சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது .
இது தவிர ஐந்து கனரக வாகன சுரங்கப்பாதை, ஆறு சிறிய ரக வாகன சுரங்கப்பாதை , ஒரு இலகு ரக வாகன சுரங்கப் பாதை ,ஒரு மேம்பாலம் ஏழு சிறு பாலங்கள் 24 பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர இரண்டு நான்கு வழி சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது தவிர 2, 467 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடமும் தொடங்கி வைக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளில் ஒன்றாகும்.