பொதுமக்களே உஷார்!- தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைனில் புதிய மோசடி
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைனில் வெடிகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By : Karthiga
தீபாவளி பண்டிகை வருகிற பன்னிரண்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு , ஜவுளி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக பட்டாசு கடைகளும் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைனிலும் பட்டாசு விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களை இருப்பதால் இப்போது இருந்தே பட்டாசு சத்தம் கேட்க தொடங்கிவிட்டது.
பட்டாசுகளை வெடிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் உள்ளனர். இதற்காக பட்டாசுகளை இப்போதே மக்கள் வாங்க தொடங்கிவிட்டனர்.இதை பயன்படுத்திக் கொண்டு சிலர் போலியான இணையதளங்களை உருவாக்கி குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இணையதளங்களில் வெளியாகும் 90 சதவீத சலுகை விலையில் பட்டாசுகள் விற்பனை போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்களும் பணத்தை இழந்து வருகின்றனர் .
தஞ்சை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது பட்டாசு விற்பனை தொடர்பாக ஆன்லைன் மோசடி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்கும் மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கூறும்போது பொதுமக்கள் பட்டாசு வாங்கும் இணையதளத்தின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்க வேண்டும். பிரபலம் இல்லாத இணையதளங்களில் பட்டாசுகளை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பொருட்கள் கைக்கு வந்தவுடன் பணம் கொடுக்கும் சேவையை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் சரியாக வந்து சேர்வதை உறுதி செய்யலாம் . மோசடி இணையதளத்தில் பணம் இழப்பை தவிர்க்கலாம்.
போலியான இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து இருந்தால் வங்கி கணக்குகளை கண்காணிக்க வேண்டும். போலியான இணையதளத்தில் பட்டாசு வாங்கும் யாரேனும் பணத்தை இழந்து இருந்தால் உடனடியாக சைபர் போலீஸில் புகார் அளிக்கலாம் . இது போன்ற மோசடிகளில் சிக்கினால் சைபர் கிரைம் பிரிவை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம்.
SOURCE :DAILY THANTHI