Kathir News
Begin typing your search above and press return to search.

எங்கே இருந்தார் ராகுல் காந்தி? நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன்? #RahulGandhi #Galwan #Ladakh

எங்கே இருந்தார் ராகுல் காந்தி? நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன்? #RahulGandhi #Galwan #Ladakh

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 1:26 PM GMT

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் நாடே சீனாவின் துரோகத்தை எண்ணிக் கொந்தளித்துக் கொண்டு இருக்கும் போது காங்கிரஸ் கட்சியோ வழக்கம் போல் இதிலும் அரசியல் செய்கிறது.

"நம் வீரர்களைக் கொல்ல சீனாவுக்கு என்ன தைரியம்?"

"நமது நிலப்பகுதியை அபகரிக்க அவர்களுக்கு என்ன தைரியம்?"

"என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டும்!"

"லடாக்கில் சீனர்கள் இந்திய நிலப்பரப்பை ஆக்ககரமித்துள்ளனரா?" இவ்வாறெல்லாம் கடந்த ஜூன் 15‌ அன்று கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு உணர்ச்சி பொங்க கேள்வி எழுப்பி வரும் ராகுல் காந்திக்கு தேசப்பாதுகாப்பு குறித்த விஷயங்களில் இப்போது தான் ஆர்வம் வருகிறாரா இல்லை அவருக்கு எப்போதுமே இதில் ஆர்வம்‌ அதிகமா‌ என்று ஆய்வு செய்ய பொது வெளியில் கிடைக்கும் சில தகவல்களை அலசிப்‌ பார்ப்போம்.

தேசப் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் ராகுல் காந்தியும் ஒரு உறுப்பினர். இந்த நிலைக்குழுவின் ஒரு கூட்டத்தில் கூட ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. எனவே கடந்த இரண்டு மாதங்களாக லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது என்று செய்திகள் வந்த போதும் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னரே ராகுல் காந்திக்கு இந்த கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தன என்பது, இந்த விஷயத்தில் துளிக்கூட ஆர்வம் இல்லாத அவர் அரசியல் செய்வதற்காக இந்த துரதிருஷ்டவசமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் என்பது தெரிய வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மறுசீரமைக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு நிலைக்குழு ‌11 முறை சந்தித்திருக்கிறது. 2019ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு முறை, நவம்பரில் 3 முறை, டிசம்பரில் ஒரு முறை, 2020ம்‌ ஆண்டு பிப்ரவரியில் 5 முறை மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் 17 மற்றும் 21 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலைக்குழு ‌சந்தித்த‌ போது ராகுல் காந்தி ‌இந்தியாவில் இல்லை. கொரோனா வைரஸைப் பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பிப்ரவரி 28ம்‌ தேதி வரை இரண்டு வாரங்களுக்கு இத்தாலியில் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலைக்குழு ஐந்தூ முறை சந்தித்த போது‌‌ ராகுல் காந்தி இரண்டு முறை சில வாரங்களுக்கு வெளிநாட்டு பயணம்‌ மேற்கொண்டுள்ளார்.‌ எனினும் நிலைக்குழு சந்தித்த போது அவர்‌ முழுதும் வெளிநாடுகளில் தான் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் டிசம்பர் மாதத்தில் ஒன்றாம் தேதி நடத்தப்பட இருந்த பாரத் பச்சாவோ பேரணி 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது, "காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் இந்தியாவில் தான் இருக்கிறாரா என்பதிலேயே சந்தேகத்துடன் இருக்கிறார்கள்.மூன்று வார ஓய்வுக்கு பிறகு கடந்த வாரம் டெல்லிக்கு வந்ததாகவுமம் பின்னர் மீண்டும் கிளம்பி விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்." என்றும் "காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு தலைவரின் கூற்றுப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் மேற்கொள்ளும் ஆறாவது வெளிநாட்டு பயணம் இது" என்றும் கடந்த நவம்பர் மாதத்தில் செய்திகள் வெளியாகின.

ஆகவே பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்காமல் போனதற்கு அவருடைய கடல் தாண்டிய சுற்றுலாக்கள் தான் காரணம் என்று தெரிய வருகிறது

பாதுக்காப்பு நிலைக்குழு உறுப்பினர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க பாதுக்காப்பு துறை அமைச்சக அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், சில சமயங்களில் ராணுவத்தின் துணை‌த் தளபதி கூட இந்த கூட்டங்களில் கலந்து கொள்வது வழக்கம். மேலும் சில சமயங்களில் எல்லைப் பகுதிகளுக்கே கள ஆய்வுக்கு அழைத்துச் சென்று முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விளக்கம் அளிக்கப்படும்‌.

அந்த மாதிரி பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒரு‌ கூட்டத்தில் தான் எல்லைச் சாலைகள் அமைப்பின் பணிகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. சீனாவை ஒட்டிய எல்லையில் 61 ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் அமைக்கும் பணி எல்லைச் சாலைகள் அமைப்பிடம் ஒப்புவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணி விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது கூட லடாக் எல்லையில் அத்துமீறி நடந்து கொள்ளும் சீனாவின் செயல்பாட்டுக்கு பின்னணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சாலைகளை அமைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி நான்கு ஆண்டுகளில் 7,200 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கப்பட்டு வேலைகள் துரித கதியில் நடைபெற்றன. இந்த தகவல்கள் அனைத்தும் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு வழங்கப்பட்ட‌ விளக்கத்தில் இருந்திருக்கும்.

இவற்றையெல்லாம் தவற விட்டதோடு நாது லா மற்றும் தவாங்‌ ஆகிய எல்லைப் பகுதிகளுக்கு நிலைக்குழு மேற்கொண்ட கள ஆய்வு பயணத்தையும் ராகுல் காந்தி தவற விட்டுவிட்டார். இந்த ஆய்வுக் கூட்டங்களில் 'ராணுவ தளவாடங்களை நகர்த்த தேவைப்படும் போக்குவரத்து வசதி மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் நடக்கூம் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்' ஆகியவற்றைப் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

இந்த ஆய்வுப் பயணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 மற்றும் 9ம் தேதிகளுக்கு இடையில் நடைபெற்றது. ஆனால் ராகுல் காந்தி அக்டோபர் 28ம் தேதியே வெளிநாட்டு பயணத்திற்கு கிளம்பி விட்டார்.

ராணுவத்தின் நவீன மயமாக்கல், முப்படைத் தலைவர் பதவியின் பொறுப்புகள், மூன்று படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை பட்ஜெட் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்த பாராளுமன்ற நிலைக்குழுக் கூட்டங்களையும் தவிர்த்துள்ளார். எந்த வகையிலும் நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டவராக நடந்து கொள்ளாத ராகுல்காந்தி தற்போது மட்டும் ஏன் இந்த கேள்விகளை எழுப்புகிறார் என்று பலதரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


நன்றி : ஸ்வராஜ்யா

Next Story