ராமநாதபுர பிரம்மபுரீஸ்வரர் கோபுரத்திற்கு தரமில்லாத சிமெண்ட் - கோவில் திருப்பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
ராமநாதபுரம் நொச்சிவயலில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு தரமில்லாத சிமெண்ட் பயன்படுத்துகின்றனர், அதிகாரிகள் அலட்சியத்தால் அறநிலையத்துறை நிதி வீணடிக்கப்படுகிறது என கோவில் பூஜாரிகள் பேரவை புகார் தெரிவித்துள்ளனர்.

By : Mohan Raj
ராமநாதபுரம் நொச்சிவயலில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு தரமில்லாத சிமெண்ட் பயன்படுத்துகின்றனர், அதிகாரிகள் அலட்சியத்தால் அறநிலையத்துறை நிதி வீணடிக்கப்படுகிறது என கோவில் பூஜாரிகள் பேரவை புகார் தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை உதவியுடன் இராஜகோபுர திருப்பணி நடந்து வருகிறது, கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக பணிகள் பாதிக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் பணிகள் துவங்கியுள்ளது இதில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கு தரமில்லாத சிமெண்ட் பயன்படுத்துகின்றனர் என புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஹிந்து கோவில் பூஜாரிகள் பேரவை மாநில துணை தலைவர் கோதாவரி, பூசாரி மாவட்ட அமைப்பாளர் நாகராஜன் மண்டல அமைப்பாளர் பஞ்சவர்ணம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்துக் கோவில் பூஜாரிகள் பேரவை மாநிலத் துணைத் தலைவர் கோதாவரி கூறுகையில், 'பிரம்மபுரீஸ்வரர் கோவில் சுண்ணாம்பு, கடுக்காய் போன்ற மூலிகைச் சாறுகள் சேர்த்து கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். 40 லட்ச ரூபாய் நிதியுடன் திருப்பணி நடைபெறுகிறது
ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் சிமெண்ட் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டது. அதனை பயன்படுத்தி தற்போது ராஜகோபுரம் கட்டுகின்றனர் இவ்வாறு கட்டப்படுவதால் விரைவில் கோபுரம் பழுதாகி விடும் ஆகையால் புதிதாக சிமெண்ட் வாங்க வேண்டும் பழமை மாறாமல் ராஜகோபுரம் கட்ட வேண்டும் அதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்' என கூறி வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
