திருவான்மியூர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புத்தர், ராமர் உட்பட 15 பழங்கால சிலைகள் மீட்பு
திருவான்மியூர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புத்தர் ராமர் உட்பட 15 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன சிலைகள் அனைத்தும் கடத்தல் கும்பலிடம் இருந்து வாங்கியது தெரிய வந்தது.
By : Karthiga
திருவான்மியூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந் நடராஜர், ராமர், புத்தர் , விநாயகர் உட்பட 15 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த பழங்கால சிலைகள் சேகரிக்கும் நபர்களிடம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் தன்னிடம் உள்ள பழமையான சிலைகளை விற்பனை செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்த ரகசிய தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்ததும் டி.எஸ்.பி முத்துராஜா வியாபாரி போல சிலை புரோக்கர் சுரேந்திரனை தொடர்பு கொண்டு சிலைகளை வாங்கப் போவதாக பேசியுள்ளார்.
முதலில் சிலைகள் குறித்து வாய்திறக்க மறுத்த சுரேந்திரன் பின்னர் வாங்க நினைப்பவர் உண்மையிலேயே வியாபாரி என்பது உறுதியான பிறகு டி.எஸ்.பி முத்துராஜாவிடம் சிலைகள் விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டார். இதன் பிறகு விற்பனை செய்யப்படும் 15 சிலைகள் குறித்து புகைப்படங்களை டி.எஸ்.பி-யின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்காக பலநூறு கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். அப்போது டி.எஸ்.பி முத்துராஜா நாங்கள் சிலைகளை பார்த்து பிறகு நீங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இதன் பிறகு ஈரோடு மாவட்டத்திலிருந்து சுரேந்திரன் சிலைகள் அனைத்தும் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளது. நானும் அங்கே இருக்கிறேன் என்று வீட்டு முகவரியை கூறி வர சொன்னார். இதை அடுத்து டி.எஸ்.பி முத்துராஜா சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வியாபாரி போல சுரேந்திரனுடன் சிலை வைக்கப்பட்டுள்ள ரமேஷ் பாந்தியா என்பவரின் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு சிலைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது சிலையை வாங்க வந்துள்ள நபர்கள் போலீசார் என்று தெரிந்ததும் சுரேந்திரன் அங்கிருந்து ஓடிவிட்டார்.இதை அடுத்து டி.எஸ்.பி முத்துராஜா தலைமையில் போலீசார் ரமேஷ் பாந்தியா வீட்டில் அதிரடி சோதனை நடத்தி உலோகத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலை, தேவி, புத்தர், நந்தி, நடராஜர், ஆஞ்சநேயர், ராமர், லக்ஷ்மணன், சீதை, விநாயகர் நடனமாடும் நடராஜர் சிலை உட்பட பல கோடி மதிப்புள்ள 15 சிலைகளை பறிமுதல் செய்தனர் .
இந்நிலையில் சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரமேஷ் பாந்தியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் எந்த கோயில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தப்பி ஓடிய புரோக்கர் சுரேந்திரனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.