சனாதனம் மீதான விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுங்கள் - பிரதமர் மோடி உத்தரவு!
சனாதனம் பற்றி விமர்சிப்பவர்களுக்கு எதிராக சரியான பதிலடி கொடுங்கள் என்று அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார்.
By : Karthiga
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இம் மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அம்மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. ஒழிக்கப்பட வேண்டும் . சனாதனம் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கக் கூடியது. அதனை அழிக்க வேண்டும் என்றார்.
மத்திய அமைச்சர்கள் பா.ஜ.க தலைவர்கள் பலரும் வட இந்தியாவில் இருந்து உதயநிதிக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க அல்லாத தலைவர்கள் சனாதன ஒழிப்பு பேச்சு நோக்கம் புரிந்ததால் அமைதியாக இருந்து வருகின்றனர். இதனிடையே உதயநிதியின் தலையை சீவி எடுக்க வேண்டும் என உ.பி சாமியார் ஒருவர் ரூபாய் 10 கோடி விலை அறிவித்தார். இதுவும் பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது .தி.மு.கவை கடுமையாக எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்ம ஒழிப்பு தொடர்பான பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டது. சனாதன தர்மம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
SOURCE :Oneindia.com