சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பங்கு - ஒரு பார்வை.!
சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பங்கு - ஒரு பார்வை.!
By : Kathir Webdesk
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கமும் அதனுடைய தலைவர்களும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற பொய்யை ஊடகங்களும் பா.ஜ.க எதிர்ப்பாளர்களும் ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்களும் கூறிவருகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ராஷ்டிரிய சேவகர்களின் பங்கு என்ன என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
முதலாவதாக 1930ஆம் ஆண்டு, அதாவது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட சத்தியாகிரகத்தில் டாக்டர் ஹெட்ஜ்வர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1929 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் முழு சுதந்திரத்தை அடைவதை தீர்மானமாக நிறைவேற்றியதோடு 1930ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்தது. இதைத்தொடர்ந்து டாக்டர் ஹெட்ஜ்வர் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதம் பின்வருமாறு,
"காங்கிரஸ் சுதந்திரம் பெறுவதே தனது குறிக்கோள் என்று அறிவித்துவிட்டது. காங்கிரஸ் செயற்குழுவும் 1930ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாளை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. இந்த அகில இந்திய அமைப்பு சுதந்திரம் அடைவதற்கான அதன் குறிக்கோளை நெருங்குவது நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயமே தவிர வேறொன்றில்லை. எனவே காங்கிரசுக்கு ஒத்துழைப்பது நமது கடமை. எனவே அனைத்து ஷாக்காக்களிலும் ஸ்வயம் சேவகர்களைக் கூடச் செய்து மாலை ஆறு மணிக்கு காவிக் கொடியான தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்ய வேண்டும்" என்று எழுதியுள்ளார்.
காவி கொடியை தேசியக்கொடி என்று கூறியிருக்கிறாரே என்று விமர்சிக்க விரும்புவர்களுக்கு, 1931 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் செயற்குழு கூடி தேசியக்கொடியை வடிவமைப்பதற்கான ஒரு குழுவை உருவாக்கியது. இதில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழு காவிக் கொடியையே தேசியக் கொடியாக பயன்படுத்த பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் போராட்ட அரசியலில் இருந்து சங்கம் தள்ளியே இருந்தது. காங்கிரஸ் போராட்டங்களில் மட்டுமல்லாமல் இந்து மகாசபை முன்னெடுத்த போராட்டங்களில் கூட சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அப்போது இந்து மகாசபையில் இருந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் நிஜாமுக்கு எதிராக இந்து மகாசபை நடத்திய போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பங்கு பெறாததைப்பற்றி கோபம் கொண்டு விமர்சித்தார். அவர் வேறு யாருமில்லை, நாதுராம் விநாயக் கோட்சே தான்.
இதற்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் பாபு ராவ் தேஷ்முக் "ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்கான இராணுவமோ அல்லது இந்து மகாசபையின் ராணுவப் பிரிவோ அல்ல. இந்துக்களை உண்மையான தேசியவாதிகளாக மாற்றுவது தான் சங்கத்தின் கொள்கை" என்று கூறினார். ஒழுக்கம், தீண்டாமை இன்மை மற்றும் மற்றும் சங்கம் அளித்த பிற சேவைகளுக்காக சங்கத்தைப் பாராட்டிய காங்கிரஸ் மற்றும் இந்து சபை உறுப்பினர்கள், சங்கம் தங்களுடைய அரசியல் பிடிக்குள் இருக்க வேண்டும் என்று கருதினர். ஆனால் ஆர்எஸ்எஸ் மறுத்தபோது இந்திய தேசிய காங்கிரசும் இந்து மகாசபையும் சங்கத்தை மதவாதிகள் என்றும் இந்து எதிர்ப்பாளர்கள் என்றும் விமர்சித்தனர்.
நேரடியாக போராட்டங்களில் ஈடுபடவில்லை என்றாலும் சங்கம் புரட்சியாளர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. வங்காள புரட்சியாளர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரான த்ரிலோக்யநாத் சக்கரவர்த்தி டாக்டர் ஹெட்ஜ்வரை சந்தித்தபோது அவர் திட்டமிட்டு வந்த புரட்சிக்கு உதவ சங்க உறுப்பினர்களை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். மேலும் விடுதலை போராட்ட வீரர் ராஜகுரு தலைமறைவாக வாழ்ந்தபோது சங்கம் அவருக்கு உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் உச்சத்தில் இருந்த சமயத்தில் பாகிஸ்தான் பிரிவினையும் நெருங்கிக்கொண்டிருந்தது. இதனால் பாதிக்கப்படக்கூடிய மேற்கு பஞ்சாப் மற்றும் கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ் எந்தவகையிலும் நேரடியாக போராட்டங்களில் ஈடுபடாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய பிரிட்டிஷாருக்கு எந்தவித காரணங்களையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் நடந்து கொள்வது அவசியமாக இருந்தது. வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் எந்தப் பணியிலும் ஈடுபடாதது அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் ஆர்.எஸ்.எஸ் ஷாக்காக்களில் பிரிட்டிஷாருக்கு எதிராக நிகழ்த்தப்படும் உரைகள் குறித்து பிரிட்டிஷ் உளவு நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன. 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று புனேவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சுயநலமாக உதவி செய்து கொண்டிருந்தவர்களை குருஜி கோல்வல்கர் கண்டித்ததாக பிரிட்டிஷ் உளவு அமைப்பு பதிவு செய்துள்ளது. அதே 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று உலகமே சங்கத்துக்கு எதிராக நின்றாலும் நமது கடமையை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் உயிரையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் குருஜி கோல்வல்கர் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சிமூர் பகுதியில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட்16 அன்று நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பல சங்க உறுப்பினர்கள் நேரடியாகவே பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட சிமூர் ஆர்.எஸ்.எஸ் பிரிவின் தலைவர் தாதா நாயக்குக்கு பிரிட்டிஷ் மரண தண்டனை விதித்தது. மற்றொரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ராம்தாஸ் ராம்புரே பிரிட்டிஷாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சிமூர் கலவரத்துக்கு மூளையாக விளங்கியதாக தாதா நாயக் மற்றும் துறவி துக்டோஜி மஹராஜின் பெயர்கள் அடிபட்டன. துறவி துக்டோஜி ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததோடு பிற்காலத்தில் பிறருடன் இணைந்து விஷ்வ ஹிந்து பரிஷத்தையும் தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குருஜியின் பெருந்தன்மையும் மகத்தான குணமும் சீன அத்துமீறலின் போது அவர் செயல்பட்ட விதத்தில் வெளிப்பட்டன. இந்த மோசமான தருணத்தில் அரசை விமர்சிப்பதை விட தோள் கொடுத்து நிற்பது அவசியம் என்று கூறியதோடு, "நம் நூறுபேருடன் இன்னும் ஐவர்" என்ற மகாபாரத வரிகளையும் நினைவு கூர்ந்தார். இறுதியில் ஆர்.எஸ்.எஸ் ராணுவத்துக்கு செய்த சேவை ஆர்.எஸ்.எஸ் பற்றிய நேருவின் எண்ணத்தை மாற்றியது. சங்கத்தின் கொடிக்காக ஒரு அங்குலம் நிலம் கூட தர முடியாது என்று சொல்லிக் கொண்டு இருந்த நேரு, குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள அதே சங்கத்துக்கு அழைப்பு விடுத்தார் என்பது தான் சிறப்பு.
நன்றி: ஸ்வராஜ்யா
