தனியார் நிதி நிறுவனம் ரூபாய் 1300 கோடி மோசடி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
ரூபாய் 1300 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். மேலும் இந்த வழக்கில் ஏழு பேரை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

By : Karthiga
கோவையை அடுத்து சூலூரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கோவை பீளமேட்டில் யூ.டி.எஸ் என்ற நிதி நிறுவனத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை, மதுரை, திருச்சி, தமிழகம் மட்டும் இன்றி கேரளாவிலும் இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன. இந்த நிதி நிறுவனத்தில் சுமார் 76 ஆயிரம் பேர் ரூபாய் 1300 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கோவை மாநகர பொருளாதர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த துணை போலி சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், லட்சுமி மகேஸ்வரி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ரமேஷ் கடந்த ஆறாம் தேதி கோவை டேன்பிட் கோர்ட்டில் சரணடைந்தார். இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளத்துடன் ரூபாய் 4 கோடி மதிப்பிலான வீடு, இடம் உள்ளிட்ட சொத்துக்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
யூ.டி. எஸ் நிறுவன நிதி மோசடி தொடர்பாக இதுவரை 90 பேர் வரை மட்டுமே புகார் அளித்துள்ளனர். கோர்ட்டில் சரணடைந்துள்ள ரமேசை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்த நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை இதுவரை முடுக்கி உள்ளோம். இதில் இரண்டு வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரமேஷுக்கு உதவியாக இருந்த ஏழு பேரை அடையாளம் கண்டுள்ளோம்.அவர்களை கைது செய்யும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமாக 10 இடங்களில் வீடு நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் அரசு வழிகாட்டு மதிப்பு ரூபாய் 4 கோடி ஆகும். இதனை கையகப்படுத்த கோரி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இதை அடுத்து அரசு ஆணை பிறப்பித்ததும் இந்த சொத்துக்களை மாவட்ட வருவாய் அதிகாரி கையகப்படுத்தி கோர்ட்டில் அனுமதி பெற்று ஏலத்தில் விட நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
