நிலவின் தென் துருவத்தில் முதன் முதலில் தடம் பதித்த இந்தியா: ரஷ்ய அதிபர் பாராட்டு!
நிலவில் தடம் பதித்த இந்தியாவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டியுள்ளார்.
By : Karthiga
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் முதன்முதலில் தடம் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 'இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியதற்காக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்' என கூறப்பட்டிருந்தது.
விண்வெளியை ஆராய்வதில் இது ஒரு மிகப்பெரிய படி மட்டுமின்றி இந்தியாவின் அபாரமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை இது நிரூபிப்பதாக அவர் கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு இடையே ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன இயக்குனர் ஜோசப் பாக்கர் தனது எக்ஸ் தளத்தில் 'நம்ப முடியாதது சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கும் இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டு இருந்தார்.சந்திரயான்-3 வெற்றி மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து விண்வெளி ஆய்வு மையம் பாராட்டி உள்ளது.
SOURCE:DAILY THANTHI