Kathir News
Begin typing your search above and press return to search.

உலக மண் தினத்தில் #ScoreForSoil என்ற பிரச்சாரத்தை தொடங்கிய சத்குரு!

ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு மண் அழிகிறது என எச்சரிக்கை

உலக மண் தினத்தில் #ScoreForSoil என்ற பிரச்சாரத்தை தொடங்கிய சத்குரு!

Mohan RajBy : Mohan Raj

  |  6 Dec 2022 6:07 AM GMT

"கால்பந்தாட்ட சீசன் நடைபெறும் இவ்வேளையில், உலகளவில் ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்; வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என உலக மண் தினமன்று (டிசம்பர் 5) சத்குரு கூறினார்.

'மண் காப்போம்' இயக்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் #ScoreForSoil என்ற உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் தொடங்கி வைத்தார். கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களின் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை #ScoreForSoil என்ற ஹாஸ் டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம். மேலும், அந்த வீடியோவில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.


இது தொடர்பாக சத்குரு அவர்கள் கூறுகையில், "நாம் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண் வளத்தை 10 சதவீதம் இழந்துவிட்டோம். எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக நாம் 'மண் காப்போம்' இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம். இவ்வியக்கம் தொடங்கப்பட்ட பிறகு உலகளவில் மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது. கடந்தாண்டு க்ளாகோவில் நடைபெற்ற COP 26 சுற்றுச்சூழல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் 'மண்' குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் பிரச்சாரத்தால் இந்தாண்டு எகிப்தில் நடைபெற்ற COP 27 மாநாட்டில் மண் வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளன.

எனவே, மண் வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எந்த வேகத்தில் நடக்கும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது. எனவே, இந்த வேகத்தை துரிதப்படுத்துவதற்கு மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து இடைவிடாமல் பேசி கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, பெங்களூருவில் மண் வளப் பாதுகாப்பு தொடர்பான மோட்டார் சைக்கிள் பேரணியிலும் சத்குரு பங்கேற்றார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News