தீராத நோய் தீர்க்கும் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில்
மயிலாடுதுறையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் செம்பனார் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உப்புச்சந்தை என்ற கீழையூர் கிராமம் உள்ளது . இங்குள்ள மாரியம்மன் ஊரின் பெயரை கொண்டு உப்புச்சந்தை மாரியம்மன் என அழைக்கப்படுகிறார்.
By : Karthiga
மழையின்றி உலகம் இல்லை . மாரி இல்லாது காரியம் இல்லை என்ற பழமொழிக்கேற்ப ஊர் தோறும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் மேலப்பாதி கிராமத்துக்கும் கீழையூர் கிராமத்துக்கும் இடையே இக்கோவில் உள்ளது . தற்போது கோவில் உள்ள இந்த பகுதி முற்காலத்தில் மிகப்பெரிய காடாக இருந்தது . இங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் பூம்புகார் கடற்கரை உள்ளது. பூம்புகார் பகுதியில் உப்பளங்களில் உற்பத்தியாகும் உப்புகளை மாட்டு வண்டிகளில் ஏற்று கொண்டு வந்து இந்த இடத்தில் குவித்து ஏலம் விடுவது வழக்கம். உப்பு ஏலம் தொடர்ந்து இந்த பகுதியில் நடந்ததால் இந்த ஊர் உப்புச் சந்தை என்று அழைக்கப்படுகிறது .
பழங்காலத்தில் மன்னர்கள் பூம்புகார் கடற்கரைக்கு சென்று தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்வது வழக்கம். இவ்வாறு மன்னர்கள் செல்லும் போது சேவகர்களும் உடன் செல்வர். இந்த நிலையில் தஞ்சை மன்னனிடம் பணிபுரிந்த ஒருவர் தனது குடும்பத்துடன் பூம்புகார் சென்று விட்டு திரும்பி வரும்போது கீழேயூர் பகுதியில் அவரது பெண் குழந்தை இறந்துவிட்டது. உடனே அந்த இடத்தில் இந்த சிறுமியை அடக்கம் செய்துவிட்டு திரும்பிவிட்டனர். சிறுமியை அடக்கம் செய்த இடத்தில் அதாவது தற்போது மாரியம்மன் கோவில் உள்ள இடத்தில் முன்பு அப்பகுதி சிறுமிகள் தினமும் விளையாடுவது வழக்கம் .அந்த சிறுமிகளுடன் புதிதாக ஒரு சிறுமி தினமும் விளையாடிவிட்டு மாலை நேரத்தில் மறைந்து விடுவார் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை பற்றி அந்த கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் ஊருக்குள் சென்று கூறினார். இந்நிலையில் ஒரு நாள் உப்புச்சந்தைக்கு அருகில் உள்ள திருச்சம்பள்ளி கிராமத்துக்கு அந்த சிறுமி வீடு வீடாக சென்று பால் கேட்டாள். அவளுக்கு யாரும் பால் கொடுக்க மறுத்து விட்டனர் . ஒரு வீட்டிற்கு சென்று சிறுமி கூழ் கேட்டிருக்கிறாள். உடனே அந்த வீட்டுப் பெண் சிறுமிக்கு கூழ் கொண்டு வந்து கொடுத்துள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார் .கூழையும் தண்ணீரையும் குடித்து அந்த சிறுமி அந்த பெண்ணை பார்த்து படுக்க இடம் வேண்டும் என்று கேட்க வீட்டிற்கு பின்புறம் சென்று படுத்துக்கொள் என்று கூறுகிறாள் அந்தப்பெண்.அந்த சிறுமியும் கொல்லைப்புறத்திற்கு சென்று படுத்துக் கொள்கிறாள்.
அந்த நேரத்தில் சிறுமிக்கு பால் தர மறுத்த வீடுகளில் பானை உடைந்து பால் தரையில் கொட்டுகிறது .அனைவரும் பயந்து போய் சிறுமிக்கு கூழ் கொடுத்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு சிறுமியைக் காணவில்லை. அதற்கு மாறாக சிறுமி படுத்திருந்த இடம் புற்றாக மாறியதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வந்தது அம்மன் என்பதை உணர்ந்து அவர்கள் தங்கள் தவறை மன்னிக்குமாறு அம்மனிடம் வேண்டினர்.
இதற்கிடையில் திருச்சம்பள்ளியில் ஒரு செல்வந்தரிடம் எனக்கு இருக்க ஒரு கொட்டகை கட்டி தர வேண்டும் என அசரீரியாக சிறுமி வடிவில் இருந்த அம்மன் கேட்க அதன்படியே திருச்சம்பள்ளியில் கொட்டகை கட்டி தரப்பட்டது. முதலில் உப்பு சேந்தை மாரியம்மன் கோவில் சுரங்கத்திற்குள் இருந்தது. நாளடைவில் சிறிய கொட்டகை அமைத்து சுரங்கத்திலிருந்து வெளியே அம்மனை கொண்டு வந்தனர். பின்னர் திருப்பணிகள் நடந்து தற்போது ஐந்து நிலையுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக மாரியம்மன் கோவில் காட்சியளிக்கிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று பால்குடம் ,காவடி விழா ஆடி மற்றும் தை மாதத்தில் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை, வைகாசி மாதம் ஒன்பது நாட்கள் நடைபெறும் வைகாசி திருவிழா ஆகிய விழாக்கள் பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆகும் . மேலும் நோய் தீர்க்கும் தலமாக உள்ள இந்த கோவிலில் தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நோய்கள் நீங்க வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.