Kathir News
Begin typing your search above and press return to search.

அறிந்து கொள்வோம் சாவர்க்கரை: தலித்துகள் சரி சமமாக அமர்ந்து சாப்பிட முதன்முதலாக ஓட்டல் தொடங்கியவர் வீர சாவர்க்கர்!

அறிந்து கொள்வோம் சாவர்க்கரை: தலித்துகள் சரி சமமாக அமர்ந்து சாப்பிட முதன்முதலாக ஓட்டல் தொடங்கியவர் வீர சாவர்க்கர்!

அறிந்து கொள்வோம் சாவர்க்கரை: தலித்துகள் சரி சமமாக அமர்ந்து சாப்பிட முதன்முதலாக ஓட்டல் தொடங்கியவர் வீர சாவர்க்கர்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2019 9:14 AM IST


இந்திய விடுதலைக்காகயும், சாதிகளற்ற இந்துக்கள் சமுதாயத்தை உருவாக்கவும் தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் வீர சாவர்க்கர். இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க சிபாரிசு செய்ததை அடுத்து, காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் அவரைப் பற்றி பொய் பிரச்சாரங்களை பரப்பி வரும் நிலையில் உண்மையில் சாவர்க்கர் யார்? என்பதைப் பற்றி வெளியிடப்படும் கட்டுரை தொகுப்புகளில் ஒன்று இது.


“மற்றவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, எனது சீர்திருத்தக் கருத்தை தினசரி வாழ்க்கையில் முதலில் நான் செயல்படுத்துவேன் என்று களமிறங்குபவரே உண்மையான சீர்திருத்தவாதி” என்கிறார் வீர சாவர்க்கர். இந்தக் கூற்றுக்கு ஏற்றபடியே அவர் வாழ்ந்தும் காட்டினார்.


1925-ஆம் ஆண்டு தொடங்கி ரத்னாகிரி மாவட்டத்தின் பல பகுதிளில் சுற்றுப்பயணம் செய்து தீண்டாமைக்கும் சாதியத்திற்கும் எதிரான பிரசாரங்களை செய்து வந்தார். கிராமங்களில் கூட்டு பஜனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். கிராமப் பள்ளிகளில் தாழ்த்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படும் நடைமுறையை நிறுத்தக் கோரினார். மஹார், சமார், பால்மீகி சமுதாய மக்களிடம் அவர்கள் குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கான சிறு பொருள் உதவிகளையும் அவரது தொண்டர்கள் செய்தனர். ரத்னாகிரி ஹிந்து மகா சபா அமைப்பின் சார்பாக 1932-ஆம் ஆண்டு அப்பகுதியின் நிர்வாகியாக இருந்த லாமிங்டன் என்ற பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிக்கு ஒரு மனுவை சாவர்க்கர் அனுப்பினார் – “எல்லா சாதி மாணவர்களையும் ஒன்றாக பள்ளிகளில் அமர வைத்து கல்வி கற்பிக்க வேண்டும். அப்போது தான் பிற்காலத்தில் தங்கள் வாழ்க்கையிலும் அவர்கள் சாதியத்தைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். இது தொடர்பாக 1923-ல் அரசு இயற்றிய சட்டத்தையே அமுல்படுத்த வேண்டும். தாழ்ந்த சாதி மக்களுக்கான சிறப்பு பள்ளிகள் என்று நீங்கள் இப்போது கொண்டு வரப் போகும் திட்டத்தைக் கை விட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரினார்.


பள்ளிகள் போன்ற பொது இடங்களில் மட்டுமல்லாது, வீட்டளவிலும் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சாவர்க்கர் விரும்பினார். இதற்காக தசரா, மகர சங்கராந்தி ஆகிய பண்டிகைகளின் போது தாழ்த்தப் பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று இனிப்புகளை சாப்பிடுவதையும், வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். யமுனாபாய் (சாவர்க்கரின் மனைவி) அனைத்து சாதி இந்துப் பெண்களையும் அழைத்து மஞ்சள் குங்குமம் தாம்பூலம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார். தாழ்த்தப்பட்ட சாதி மகளிருக்கு மற்ற சாதிப் பெண்கள் குங்குமம் வைப்பது, அதே போல அவர்களிடம் குங்குமம் வைத்துக் கொள்வது என்ற இரண்டு விஷயங்களையும் அந்த நிகழ்ச்சிகளில் நடைமுறைப் படுத்தினார்.


சாவர்க்கர் ஒரு சிறந்த மராத்தி நாடகாசிரியரும் கூட. பிரபல மேடை நாடக சபைகள் அவரது நாடங்களை நிகழ்த்தும் போது, தாழ்த்தப் பட்ட சமூக நண்பர்களுக்கு அந்த நிகழ்ச்சிகளின் அனுமதிச் சீட்டுகளை இலவசமாக வழங்கினார். அவர்கள் சமூகத்தில் எல்லாருடனும் கலந்து பழகுவதற்கு இத்தகைய முயற்சிகள் உதவும் என்று மிகச் சரியாகவே அவர் கருதினார். வங்கியிலிருந்து கடன் பெற்று, தாழ்த்தப்பட்ட மக்கள் இசைக்குழு (musical band) அமைக்க உதவினார். ஆனால், 1930-களில் கூட, ரத்னாகிரியின் விட்டல் ஆலய கமிட்டியினர் கோயில் திருவிழாவின் போது முஸ்லிம் இசைக்குழுக்களை அழைத்து வந்தார்களே தவிர, இந்து தலித் இசைக்குழுவை அனுமதிக்கவில்லை. இப்படித் தான் இருந்தது அன்றைய பொது சமூக மனநிலை.


தலித்துகளுக்காக தேநீர் கடை, சிற்றுண்டி நிலையம்


1933-ஆம் ஆண்டு, மே 1-ஆம் நாள் அனைத்து இந்துக்களுக்குமான ஒரு தேநீர் விடுதி மற்றும் சிற்றுண்டிச் சாலையை ரத்னாகிரியில் சாவர்க்கர் தொடங்கினார். இந்தியாவிலேயே தாழ்த்தப் பட்ட சாதி மக்கள் மற்றவர்களுடன் சமமாக உட்கார்ந்து உணவருந்தச் செய்த முதல் உணவகம் இது தான். அதில் பரிமாறுபவர்களாக மஹார் சமூகத்தினர் இருந்தனர். தன்னை பார்க்க வருபவர்கள் யாராயிருந்தாலும் முதலில் அங்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வர வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக சாவர்க்கர் விதித்திருந்தார். இந்த எளிய செயலைச் செய்வதற்குக் கூட அந்தக் காலகட்டத்தில் மிகவும் துணிச்சல் வேண்டியிருந்தது. திலகரின் சீடரும் பிரபல மராத்திய எழுத்தாளருமான என்.சி.கேல்கர், சாவர்க்கரை சந்திக்கப் போய் அங்கு தேநீர் குடித்தார் என்பதற்காக புனே நகரின் சனாதனி இந்துக்களின் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.


சாவர்க்கரின் படைப்புகள் அனைத்தையும் தொகுத்தவர் எஸ்.ஆர்.தாதே. அவர் முதல் முறையாக சாவர்க்கரை சந்திக்கச் சென்ற அனுபவத்தை பின்னாளில் விவரிக்கும் போது, தான் தேநீர் குடிப்பதை பல சாக்கு போக்குகள் சொல்லி மறுத்ததையும், சாவர்க்கர் விடாப்பிடியாக இருந்து தேநீரை அருந்த வைத்ததையும் பதிவு செய்கிறார். அந்த உணவகம் எப்போதும் நஷ்டத்தில் தான் ஓடியது. ஆயினும் சாவர்க்கர் தனது சொந்தப் பணத்தைப் போட்டு அதைத் தொடர்ந்து நடத்தினார். அதுவும் பிரிட்டிஷ் அரசு அளித்து வந்த 60 ரூபாய் மாதாந்திரப் படித் தொகையில் அவரது குடும்பம் முழுவதுமே வறுமையில் வாழ்ந்து வந்த காலத்தில்.


சமபந்தி போஜனங்களில் கலந்து கொண்ட சாதி இந்துக்கள் அவர்கள் குடும்பங்களிலும், சமூகங்களிலும் கடுமையாக வெறுக்கப் பட்டார்கள். பரிகாரங்கள் செய்தாலன்றி அவர்கள் குடும்பத்துடன் திருமண உறவு கொள்ள மாட்டோம் என மற்ற ஆசாரவாதிகள் அறிவித்தனர். இவ்வளவற்றையும் மீறி சாவர்க்கர் சமபந்தி போஜன நிகழ்ச்சிகளை நடத்தினார். 1931-ஆம் ஆண்டு காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட 35 காங்கிரஸ் உறுப்பினர்கள் விடுவிக்கப் பட்டதைக் கொண்டாடும் வகையில் சமபந்தி போஜன நிகழ்ச்சியை ரத்னாகிரியில் ஏற்பாடு செய்தார்.


1934-ல் கொங்கண் சமாசார் என்ற பத்திரிகையை சாவர்க்கர் தொடங்கினார். அதன் தொடக்க விழாவில் நடந்த சமபந்தி போஜன நிகழ்வில் அனைத்து சாதி இந்துக்களுடன் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கலந்துக் கொண்டனர். 1936-ஆம் ஆண்டு பிரபல நடிகர் - பாடகர் பாலகந்தர்வா தனது கலை நிகழ்ச்சிக்கு சாவர்க்கரை அழைத்த போது, நிகழ்ச்சியின் இறுதியில் சமபந்தி போஜனம் இருந்தால் மட்டுமே வருதாக சாவர்க்கர் கூறி விட்டார். அவ்வாறே அந்த நிகழ்ச்சியும் நடந்தது. இந்தியா முழுவதும் பிறகு பல இடங்களில் நடந்த இத்தகைய சமுதாய சமத்துவ நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக சாவர்க்கரின் செயல்கள் அமைந்திருந்தன.


தாய் மதம் திரும்ப வைக்கும் பணிகள்


கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த தாழ்த்தப் பட்ட டாக்ரா (Dhakra) சமூகத்து மக்களை ஆரிய சமாஜ “சுத்தி” சடங்கு வழியாக சாவர்க்கர் தாய்மதம் திரும்பச் செய்தார். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மற்ற இந்துக் குடும்பங்கள் மணமுடிக்க வேண்டும் என்பதை முனைந்து செயல்படுத்தினார். இத்தகைய ஒரு பெண்ணின் திருமணத்தில் தானே அவளது தந்தையாக இருந்து “கன்யாதானம்” செய்து வைத்தார். மாங்க் (maang) சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் சாவர்க்கர் வீட்டிலேயே அவரது மகள் போல வளர்ந்தாள். பல தாழ்த்தப் பட்ட சமூக மக்களுக்கு எழுதப் படிக்க கற்பிக்கும் வகுப்புகளை தனது வீட்டிலேயே சாவர்க்கர் நடத்தினார். அந்த மாணவர்களுக்கு மற்ற பாடங்களுடன் காயத்ரி மந்திரத்தையும் கற்றுக் கொடுத்தார்.


1933 பிப்ரவரி 22 அன்று “தீண்டாமை” அரக்கனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியை பெரிய அளவில் விளம்பரம் செய்து ரத்னாகிரியில் சாவர்க்கர் நடத்தினார். டாக்டர் அம்பேத்கரின் மஹாட், நாசிக் சத்தியாகிர போராட்டங்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். 1933 நவம்பர் 13 அன்று ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அம்பேத்கரை ரத்னாகிரிக்கு வருமாறு சாவர்க்கர் அழைப்பு விடுத்தார்; ஏதோ காரணங்களால் அம்பேத்கர் வர முடியாமல் போயிற்று. 1930-ல் முதல் முறையாக தாழ்த்தப்பட்ட இந்துக்களும் கலந்து கொண்ட ‘கணேச உத்சவ்’ விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தினார். அந்த விழா நிகழ்ச்சிகளில் தாழ்த்தப்பட்ட சாதிகளின் கலைஞர்கள் கீர்த்தனங்கள் பாடினர். அப்பாடகர்களை மற்ற சாதி இந்துக்கள் மாலை அணிவித்து கௌரவித்தனர். அனைத்து சாதி பெண்களும் கலந்துக் கொண்ட சமபந்தி போஜனம் இந்த விழாவின் சிறப்பு அம்சமாக இருந்தது.


ஆலய பிரவேச இயக்கங்கள் தொடங்கியிராத காலகட்டம் அது. எந்த விதத்திலும் சாதிப் பாகுபாடுகள் இல்லாத ஒரு புதிய இந்து ஆலயத்தை முன்னுதாரணமாக நிறுவ வேண்டும் என்ற சாவர்க்கரின் திட்டத்திற்கு அவரது சகாக்களான பாகோஜி சேத் கீர், டாக்டர் மகாதேவ் கண்பத் ஷிண்டே, காசிநாத் லட்சுமண் பாருலேகர் ஆகியோர் எல்லா ஒத்துழைப்பும் தருவதாகக் கூறினர். 1929-ஆம் ஆண்டு மகாசிவராத்திரி தினத்தன்று டாக்டர் குர்தகோடி(Dr. Kurtakoti) சங்கராசாரியார் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சங்கராசாரியார் சாதியத்தை முழுமையாக எதிர்த்த சிறந்த ஆன்மீகத் தலைவராவார். அந்த விழாவில் சாவர்க்கர் கோயில் குறித்த தனது சிந்தனைகளை வெளியிட்டார்.


“காசி, பூரி, துவாரகை, ராமேஸ்வரம் முதற்கொண்டு அனைத்து கோயில்களும் எல்லா சாதிகளையும் சேர்ந்த இந்துக்கள் தரிசனம் செய்ய திறந்து விடப் பட வேண்டும். அதுவே எனது எண்ணம். பிறப்பு அடிப்படையிலான சாதி வேறுபாட்டைக் காட்டி எந்த ஒரு இந்துவுக்கும் அந்த உரிமை மறுக்கப் படக்கூடாது. இந்தக் கொள்கையை ஒட்டுமொத்த இந்து சமூகமும் கட்டாயம் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறது. அதுவரை காத்திருக்காமல், உடனடியாக இத்தகைய ஒரு கோயிலை நாம் உருவாக்கிக் காட்டியாக வேண்டும்.


கட்டிட காண்டிராக்டரான பாகோஜி சேத் தலைமையில் உருவாகும் அறக்கட்டளை இக்கோயிலைக் கட்டும். ஸ்ரீ லஷ்மி நாராயணர், புனிதமான சிவலிங்கம், குருபாதுகைகள் ஆகிய தெய்வங்கள் இக்கோயிலை அலங்கரிக்கும். பிராமண க்ஷத்ரிய வைசிய சூத்திர சமூகங்களிலிருந்தும், இப்போது தீண்டாதார் ஆக உள்ள சாதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கோயில் கமிட்டியில் இருக்க வேண்டும். கோயிலின் அர்ச்சகர் இதில் எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்!” என்று தனது வரைவை முன்வைத்தார்.


“இந்த வரைவை நாம் செயல்படுத்த முடியவில்லை என்றால் புதிய கோயில் கட்டுவதற்கே அவசியமில்லை. தனது பழைய கோயில்களை பாதுகாக்கும் துணிவும் சக்தியும் இல்லாத ஒரு சமூகத்திற்கு புதிய கோயில்களைக் கட்ட எந்த அதிகாரமும் இல்லை. இந்தக் கோயில் அந்த சக்தியைத் தூண்டும் ஒரு கேந்திரமாக அமையும். மஹார், சமார் என்று தீண்டாதார் ஆகிவிட்ட சமூகம் மட்டும் இன்று தாழ்ந்தவர்களாக, “பதிதர்களாக” இல்லை. ஒட்டுமொத்த இந்து சமூகமுமே அன்னிய ஆட்சியின் கீழ் தாழ்ந்து போய் இருக்கிறது. தாழ்வுற்று நிற்கும் இந்த ஹிந்து தேசத்தை மீட்கும் தெய்வத்தை, ஹிந்துக்கள் இழந்து விட்ட அனைத்தையும் அவர்கள் திரும்ப்ப் பெறச் செய்யும் ஒற்றுமை தெய்வத்தை நான் “பதித பாவன” என்று அழைப்பேன்” என்று முழங்கினார். விழாவின் முடிவில் சாவர்க்கர் இயற்றிய இந்து ஒற்றுமை கீதம் பாடப் பட்டது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News