Kathir News
Begin typing your search above and press return to search.

முதலீட்டு செயலிகளில் நடக்கும் நூதன மோசடி- மக்களே உஷார்!

தொழில்நுட்ப உலகில் பல்வேறு செயலிகளின் வழியாக பல நூதன மோசடிகள் நடைபெற்று வருகின்றன.அவற்றையெல்லாம் நம்பி ஏமாறாமல் மக்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

முதலீட்டு செயலிகளில் நடக்கும் நூதன மோசடி- மக்களே உஷார்!
X

KarthigaBy : Karthiga

  |  25 March 2024 8:45 AM GMT

தொழில்நுட்ப உலகில் நாளுக்குநாள் இணைய குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டம், கடன் செயலி மோசடி சமூக ஊடகங்களின் போலி கணக்கு, ஆள்மாறாட்ட மோசடி பகுதி நேர வேலை மோசடி போன்ற பல மோசடிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் சட்டம் 2023 ஆகியவற்றை அரசாங்கம் இயற்றியுள்ளது.

இணைய குற்றங்கள் அனைத்தும் பணத்தை மையமாகக் கொண்டுதான் நடக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற செயலிகள் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த மோசடியானது மக்களுக்கு சமூக வலைதளம் மூலமாகவோ அல்லது அவர்களுக்கு தெரிந்த நபர்கள் மூலமாகவோ அறிமுகம் ஆகின்றனர். நாம் யாருக்காவது அது போன்ற பண முதலீட்டு செயலியை பரிந்துரைத்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக செயலாற்ற வேண்டும். ஏனெனில் பரிந்துரைப்பவருக்கு அந்த செயலி உண்மையான செயலியா போலியான செயலியா என்பது தெரியாது.

மேலும் செயலி தரப்பில் இருந்து பரிந்துரைப்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகை பரிசாக வழங்கப்படுவதால் அதன் உண்மை தன்மையை ஆராயாமல் அது போன்ற மோசடி செயலிகளை மற்றவருக்கு பரிந்துரைக்கின்றனர். இதுபோன்ற மோசடி செயலிகள் உங்களது வங்கி தகவல்கள் எதையாவது குறி வைக்கும். உங்களுடைய வங்கி தகவல்கள் கொடுத்தால் மட்டுமே அந்த செயலிக்குள் உள் நுழைந்து பயன்படுத்தும் அளவிற்கு புத்திசாலித்தனமாக இயங்குகிறார்கள்.

இதில் நீங்கள் சிக்கிக் கொண்டால் ஆரம்பத்தில் நீங்கள் செய்யும் முதலீடு தொகையை இரண்டு மடங்கு அதிகரித்து உங்கள் வங்கி கணக்குக்கு செலுத்துவார்கள். அப்போதுதான் உங்களுக்கு அந்த செயலி மீது நம்பிக்கை ஏற்படும். அதன் பின்னரே அவர்களின் ஆட்டம் தொடங்கும். மோசடிக்காரர்கள் உங்களை நம்ப வைப்பதற்காக அதே போல் சில நாட்கள் இரண்டு மடங்கு அதிகரித்து உங்களுக்கு பணம் அனுப்புவார்கள். இது சில நாட்கள் கடந்த பின்னர் ஒருநாள் சலுகை என்று கூறுவார்கள். உதாரணத்திற்கு நீங்கள் ரூபாய் 50,000 முதலீடு செய்தால் உங்களுக்கு மூன்று மடங்கு அதிகரித்து உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறுவார்கள் .

உங்களைப் போல பலரும் இதை நம்பி முதலீடு செய்வார்கள். ஆனால் உங்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைக்காது .நீங்கள் அவர்களை தொடர்பு கொள்வீர்கள். அவர்கள் உங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கூறி அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே உங்களின் பணம் உங்களுக்கு வந்து சேரும் என்பார்கள். நீங்களும் அதனை நம்பி அவர்கள் கூறும் தொகையை செலுத்துவீர்கள் .ஆனால் அங்குதான் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

மோசடிக்காரர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பணம் கிடைத்தவுடன் அந்த போலி செயலியை நிரந்தரமாக மூடிவிட்டு உங்களின் பணத்தையும் ஏமாற்றி விட்டு சென்று விடுவார்கள். அவர்களை நீங்கள் தொடர்பு கொள்வது இயலாத காரியம். எனவே ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற செயலிகள் அனைத்தும் உண்மை அல்ல. பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் மோசடியாக பணம் எடுக்கப்பட்டிருந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News