பொங்கல் எனும் அறிவியல் திருவிழா! #Pongal2020
பொங்கல் எனும் அறிவியல் திருவிழா! #Pongal2020

By : Kathir Webdesk
பொங்கல் பண்டிகை என்பது அருவடைத்திருநாள், தமிழர் திருநாள் என்று நாம் உயர்த்தி கொண்டாடும் அதே வேளையில் அதன் பின் உள்ள அறிவியலையும் உணர்ந்து கொண்டாட வேண்டும்.
நமது பாரத பண்பாட்டைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கை என்ற அளவில் எந்தவொரு விஷயத்தையும் சுருக்கி விட முடியாது. எல்லாமே அறிவியல் தான். நமது முன்னோர்கள் பூமியின் வட்டப் பாதையை துள்ளியமா கணித்ததுள்ளதை போல சூரியனின் சுழற்சியையும், வட்டப் பாதையையும் மிகவும் துள்ளியமாக கணக்கிட்டுள்ளார்கள். சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கின்ற ஆறு மாதக் காலம், தை முதல் ஆனி வரை, உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் தேவ வருடத்தின் ஒரு நாளின் பகல் பொழுது. அதைப்போல சூரியன் தெற்கு நோக்கி சஞ்சரிக்கின்ற ஆறு மாத காலம், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை, தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகின்றது இதுதான் தேவ வருடத்தின் இரவு பொழுது. இவ்வாறாக சூரியனின் சுழற்சியின் அடிப்படையிலான தேவ வருடத்தின் ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம் .
இவ்வாறாக 365 நாட்கள் சேர்ந்து ஒரு தேவ வருடம் என்று கணக்கிடப்படுகிறது.
இதை இன்றைய அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவதை விட இன்றைய அறிவியல் இதை இப்போதுதான் கண்டுபிடிக்கவே ஆரம்பித்திருக்கிறது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். காலத்தின் அளவு என்பது பிரபஞ்சத்தின் பல்வேறு அடுக்குகளில் வெவ்வேறாக இருக்கும் என நவீன அறிவியல் கூறுகிறது. ஆனால் அதன் துல்லியமான காலக் கணக்கீட்டை அறிய நவீன அறிவியல் நம் வேதங்களையும், நமது ஆன்மீகக் கருத்துக்களையும்தான் நாடுகிறது.
அதாவது ஒளி ஆண்டில் (லைட் இயர்) பயணிக்கின்ற ஒருவன் 10 நாட்கள் கழித்து இந்த பூமிக்கு திரும்ப வரும்பொழுது இங்கு பத்து வருடங்களுக்கு மேல் கடந்திருக்கும் என்று ஆராய்ந்து சொல்கின்றது இன்றைய அறிவியல். இதை அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் கூட நிறையப் படங்கள் வந்திருக்கின்றன "Intersteller" என்று ஒரு படம்…. விண்வெளிக்கு பயணம் செல்லும் படத்தின் கதாநாயகன், அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக விண்வெளியில் மாட்டிக்கொண்டு சில நாட்கள் கழித்து இங்கு பூமிக்கு வருவார். அவரது மகளுக்கு வயது ஆகியிருக்கும். ஆனால் இவர் அப்படியே இருப்பார்.
நமது வேதங்கள், நமது தமிழ் ஆகமங்கள் சொல்லி வைத்துவிட்டு போன அறிவியல் கருத்துக்களை எடுத்து சொன்னால் உதாசீனப்படுத்துவது, அதையே ஹாலிவுட் படமோ அல்லது மேற்கத்திய அறிஞர்கள் கண்டுபிடித்தார்கள் என்று சொன்னாலோ தூக்கி வைத்து கொண்டாடுவது நம்மிடையே புரையோடிப்போன ஒரு பழக்கம்.
பூமியில் எப்படி காலை 6 மணிக்கு சூரிய உதயத்துடன் ஒரு நாள் துவங்குகிறதோ, அதை போல் தேவ வருடத்தின் ஒரு நாளின் பகல் நேரத்தின் தொடக்கம் என்பது நமக்கு தை மாதமாக இருக்கிறது. அதனால் தான் அதை நம் தமிழர் பண்பாடு "பொங்கல் விழாவாக" சூரியனுக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறது. ஆகவே நமது தைத்திருநாள் என்பது வெறும் அறுவடைத்திருநாள் மாத்திரம் அல்ல. அது தேவ வருடத்தின் ஒரு நாளின் தொடக்கம். அதாவது சூரியனின் காலைப்பொழுது என்ற அறிவியல் புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
இப்போது நமக்கு ஆடி மாதத்தின் விழாக்களுக்கும் கட்டுப்பாடுகளுக்குமான காரணமும் புரிந்திருக்கும். அதாவது ஒரு தேவ வருடத்துடைய ஒரு நாளின் (நமக்கு ஒரு வருடம் ) அந்தி பொழுது, பூமிக்கு ஆடி மாதம் ஆகிறது. அதனால் தான் அந்த மாதம் முழுவதும் நாம் தினசரி பொழுது போகும் நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டோமோ அப்படி மாதம் முழுதும் இருக்க அறிவுறுத்தப்படுகிறோம். ஆடி மாதம் புது மண தம்பதிகளை பிரித்து வைப்பதன் காரணமும் இதுதான் .
பூமிக்கான ஒரு வருடத்தையே துல்லியமாக கணக்கிட முடியாமல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை லீப் இயர் கொண்டாடுகிறது நவீன அறிவியல். ஆனால் நமது இந்து பண்பாடு சூரியனின் ஒரு நாளை மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்தின் ஒரு நாளையும், இந்த பேரண்டத்தின் ஒரு நாளையும் கூட துல்லியமாக கணக்கிடுகிறது. நமது அண்டத்தின் பேரண்டத்தின் காலக் கணக்கை விளக்குவதே நமது நடராஜர் சிலை. அதனால் தான் பல்வேறு மேனாட்டு அறிஞர்கள் நமது நடராஜர் சிலையையும் அதன் உட்பொருளையும் ஆராய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
Tao of physics என்ற புத்தகத்தில் நமது நடராஜர் சிலையில் உள்ள பிரபஞ்சத்தின் காலக்கணக்கீடு பற்றிய அறிவியலை சிலாகிக்கிறார் அதன் எழுத்தாளர் காப்ரா.
பிரபல பாடகர் சீரகாழி கோவிந்தராஜன் அவர்களின் மகன் திரு.சிவசுப்ரமனியம் பிரபல நாளிதழில் எழுதியிருந்த கட்டுரையில் டிசம்பர் மாத சீசன் என்பது வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் உருவானது என்ற தகவலை பரிமாறியிருந்தார். வெள்ளையர்கள் டிசம்பர் மாதங்களில் கிருஸ்ம்ஸ மற்றும் ஆங்கில புது வருட கொண்டாட்டங்களுக்காக தங்கள் நாடுகளுக்கு செல்வார்கள். அப்போது இங்கு எதுவும் பிரச்சனையோ, விடுதலை போராட்டங்களோ ஏற்படாமல் மட்டு படுத்துவதற்கான ஒரு ஏற்பாடாக தான் டிசம்பர் சீசன் ஏற்படுத்தப்பட்டதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது முற்றிலும் தவறானதொரு தகவல் மட்டுமல்ல, மார்கழி மாத இசை விழாக்களின் தொன்மை மற்றும் பழமையான பாரம்பரியத்தை இருட்டடிப்பு செய்வதாகவும் அமைந்து விடும்.
இன்று இப்படி சொல்ல ஆரம்பிப்பார்கள். பின்பு, வெள்ளைக்காரன் கொண்டு வந்தது நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்று கூறி மார்கழி இசை விழாக்களுக்கு மூடு விழா நடத்த முயற்சிப்பார்கள்.
மார்கழி மாத இசை விழாக்கள் என்பது இன்று நேற்று உருவானதல்ல. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இருந்தே இந்த பழக்கம் இந்திய பண்பாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.
சரி. விஷயத்திற்கு வருவோம். இங்கு ஒரு வருடம் என்பது தேவ வருடத்தில் ஒருநாள் என்று பார்த்தோமல்லவா, அதேபோல் தேவர்களின் ஒரு நாளில் ப்ரம்மமுகர்தம் என்று அழைக்கப்படக்கூடிய விடியல் பொழுது (காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள்ளான நேரம்) அதுதான் நமக்கு (பூமிக்கு) மார்கழி மாதம். இதனால் தான் மார்கழி மாதம் பன்னெடுங்காலமாக இறைவனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப் பட்டு வருகிறது. "மாஸானாம் மார்கசீர்ஷ" என்று கண்ணன் பகவத் கீதையில் கூறுகிறான் "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்பது இதன் பொருள். தினசரி நாளில் ப்ரம்ம முகுர்த்தம் என்பது எப்படி இந்து பண்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோல், மார்கழி மாதம் முழுவதும் முக்கியத்துவம் பெருகிறது. தினசரி பிரம்ம முகுர்த்த நேரத்தில் o3 எனப்படும் ஓசோன் அதிகரித்து காணப்படுவது போலவே மார்கழி மாதம் முழுவதும் அது நிறைந்திருக்கும். நம் முன்னோர்கள் தினசரி ப்ரம்ம முகர்த்தத்தில் நம்மை என்னெவெல்லாம் செய்ய சொல்லி வலியுறுத்தினார்களோ அதையெல்லாம் மார்கழி மாதம் முழுதும் செய்ய சொன்னார்கள்.
அதிகாலையில் நமது பண்பாட்டில் இறைவனுக்கான இசை என்பது நீக்கமற நிறைந்த ஒன்று. கோவில்களில் மட்டும் அல்ல, அதிகாலை நேரங்களில் வீடுகளில் கூட சுப்ரபாதம், கந்தர் சஷ்டி கவசம் என இன்றும் நாம் ப்ரம்ம முகூர்த்த நேரத்தை இறை இசையோடுதான் தொடங்குகிறோம். தினமும் ப்ரம்ம முகுர்த்த நேரத்தில் இசை கலைஞர்கள், பாடகர்கள் சாதகம் செய்வார்கள். இது ஒரு உளவியல், அதிகாலையில் நமது ஆழ்நிலை மனம் விழிப்பு பெறுகிறது. அந்த நேரத்தில் நாம் செய்யும் எந்த ஒரு செயலிலும் மனம் ஒருமுகப்படும். அதுவும் இசையாக இருந்தால் நமது மனம் நம்மை அறியாமலே அதில் லயிக்கும். உதாரணமாக, நாம் அதிகாலையில் கேட்கும் பாடல் நாள் முழுவதும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். நம் மனம் நாள் முழுதும் இறைவனை நினைத்துக் கொண்டே இருக்கவே நம் முன்னோர்கள் இவ்வாறு செய்தார்கள். மார்கழி மாதம் முழுதும் பிரம்ம முகுர்தம் என்பதால் அப்போது நாம் எடுக்கும் தியான முயற்சிகள் எளிதில் வெற்றி பெறும். ஆறாவது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை சிந்திக்கும் ஆற்றல் நமக்கு வாய்க்கும். ஆகவே தான் மார்கழி மாதம் முழுதும் இசையால் இறைவனை ஆராதித்தார்கள் நம் முன்னோர்கள். மார்கழி மாதம் முழுவதும் ஆங்காங்கே நிகழ்த்தப்படும் இசை ஆராதனைகள் நம் மனதில் ஒலித்து கொண்டே இருக்கும். நமது இறை வழிப்பாட்டில் எப்போதுமே இசை ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது. நமது வேதங்களில் கூட இசை யோடு பாடக்கூடிய சாம வேதம் முக்கியத்துவம் பெறுகிறது. "வேதானாம் சாமவேதோஷ்மி" என்று பகவத் கீதையில் கண்ணன் கூருகிறான், இதன் பொருள் "வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்."
ஆனால் நாமோ, நமது அறிவியல் பூர்வமான வாழ்வியல் முறைக்கு, கற்பனையாக வாய்க்கு வந்த விளக்கத்தை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நமது பாரதப் பண்பாட்டில் நம்பிக்கையோ, மூடநம்பிக்கையோ எல்லாம் கிடையாது. எல்லாமே அறிவியல் தான், அது எளிமையான மக்களுக்கு புரியாது என்பதால் கதைகளாக, நம்பிக்கைகளாக மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணமாக பிள்ளையாருக்கு தோப்பு காரணம் போடுவதை நாம் வெறும் நம்பிக்கையாகவே செய்து வந்தோம். ஆனால் இன்றைய அறிவியல் தோப்பு காரணம் போடுவதும், தலையில் குட்டிக் கொள்வதும் மன அமைதியையும், மன ஒருமைப் பாட்டையும் உண்டாக்கும் என கண்டறிந்துள்ளது. ஆகவே, நமது ஒவ்வொரு நம்பிக்கையிலும் உள்ள அறிவியல் உண்மை என்னவென்று அறிந்துக்கொள்ள முயற்சிப்போம். அது புரிகிற வரை வாய்க்கு வந்த விளக்கத்தையெல்லாம் அதற்கு கொடுக்காமல் அமைதியாக பின்பற்றுவோம். அதுவே உலகையே கட்டி ஆண்ட நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் பெரிய உபகாரம்.
