ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமாக திகழ்ந்த மூத்த வக்கீல் பராசரனுக்கு விருது- சென்னையில் நடந்து விழாவில் வழங்கப்பட்டது
ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமாக திகழ்ந்த சுப்ரீம் கோர்ட் மூத்தவக்கில் பராசரனுக்கு சென்னையில் விருது வழங்கப்பட்டது.
By : Karthiga
குமார்சபா புஸ்தகாலயா சார்பில் 33 ஆம் ஆண்டு டாக்டர் ஹெட்கேவார் விருது வழங்கும்விழா சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே. பராசரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய், ஆர்.எஸ்.எஸ் முன்னாள் பொதுச்செயலாளர் பையா ஜி.ஜோஷி சோகோ நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சம்பத்ராய் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையை அடைந்ததற்கு தூணாக நின்று துணை புரிந்தவரும் நம் தேசத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கருவியாகவும் இருப்பவர் பராசரன். தீர்ப்பு வெளியாவதற்கு முந்தைய நாள் வரை தினமும் பல மணி நேரம் உழைத்தவர். தேசத்தின் சின்னமாக கருதப்படும் ராமர் கோவிலை மீட்பதற்கு மூல காரணமாக திகழ்ந்தவர் பராசரன். அவர் கோர்ட்டில் வாதாடும்போது தான் இருக்கையில் அமராமல் காலில் காலணி அணியாமலும் வாதாடினார். இது ராமருக்கு அவர் கொடுக்கும் மரியாதையையும் வழக்குக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பராசரன் பேசுகையில் ராமர் கோவில் தீர்ப்புக்காக 20 மணி நேரம் தொடர்ந்து உழைத்ததாக எனக்கு முன் பேசியவர்கள் கூறியது என் மீது அவர்கள் காட்டும் அன்பு பிரதிபலிக்கிறது. என்னை நான் ஒரு கருவியாக மட்டுமே எண்ணிக் கொள்கிறேன். இந்த தீர்ப்புக்காக நான் வாதாட வேண்டும் என்று பகவான் விரும்பியது என் பாக்கியமே. பிரம்மனின் படைப்பில் அனைவரும் சிறப்பானவர்களே என்னால் இயன்றவரை இந்த சமுதாயத்துக்கு பயனுள்ளதை அளிக்க முயற்சித்துள்ளேன்.இறுதிவரை என் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.