காலக் கோளாறுகளையும் தீவினைகளையும் வேரறுக்கும் சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது.பைரவருக்கு என தனி சன்னிதி சேத்திர பாலபுரத்தில் மட்டுமே உள்ளது.
By : Karthiga
இப்பிறவியில் நாம் யாருக்கும் எந்த பாவமும் செய்யாதருந்தாலும் நம் வாழ்வைச் சூழ்ந்த துன்பம் நம்மை விட்டு விலகாமல் இருக்கிறது. இதற்கு நாம் பித்ருகடன், பரிகார பூஜை, விரதமுறை குலதெய்வ வழிபாடு போன்றவற்றை மறந்ததே காரணமாகும். குறிப்பாக பைரவர் வழிபாடு மனிதர்களை தீவினைகளில் இருந்து காத்து அவர்களுக்கு நல் வாழ்வை அளிக்கும்.
பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருந்து பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தும் தோஷம் நீங்கவில்லை. இறுதியாக காவிரி தென் பகுதியில் உள்ள திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட்டவுடன் காலபைரவருக்கு பிரம்மஹத்தி சாபம் நீங்கியது. அப்போது விநாயகர் பெருமான் பைரவருடைய சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசுமாறு கூறினார். இதனால் பைரவர் தனது சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீச அந்த சூலாயுதம் சேத்திரபாலபுரம் இந்திர தீர்த்தத்தில் விழுந்தது.
சூலம் தூக்கி வீசப்பட்ட பிறகு இந்த ஊரில் தான் சூலாயுதம் கிடக்கும் என்று விநாயகர் காலபைரவரை அழைத்து வருகிறார். பிறகு சேத்திர பாலபுரத்தில் உள்ள கணபதி தீர்த்தம் மற்றும் இந்திர தீர்த்தத்தில் நீராடிய பிறகு சூலம் கிடைக்கிறது. அதன்பின் சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு அதே சுவேத விநாயகரை தரிசனம் செய்ய பைரவர் சென்றபோது பைரவரிடம் விநாயகர் தற்போது கோவில் உள்ள இடத்தில் சேத்திர பாலகராக தங்கி சூலகட்டு வியாதிகளை நிவர்த்தி செய்து பக்தர்களை காக்க கட்டளையிட்டார்.
சேத்திரபாலகராக பைரவர் இங்கு தங்கியதால் இந்த ஊர் சேத்திர பாலபுரம் என அழைக்கப்படுகிறது இந்த தலத்தில் பைரவருக்கு நாய் வாகனம் கிடையாது. தாமரை மலரில் பைரவர் வீற்றிருக்கும் காட்சி கான்போரை நேசிக்க வைக்கிறது. இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும் ஒன்பது கிரகங்களுக்கும் அதிபதியாவார். இந்த கோவிலில் நடைபெறும் வழிபாடு வேறு எங்கும் இல்லாத வகையில் தனி சிறப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் தேங்காய்மூடியில் நெய் தீபமிட்டு வழிபட்டால் குடும்ப நலன் காரிய வெற்றி கிடைக்கும். குறிப்பாக திருமண தடை அகலும் என்பது ஐதீகம்.