11 மணி நேரம் 15 நிமிடம் கிணற்றில் மிதந்தபடி யோகாவில் உலக சாதனை செய்த ஏழாம் வகுப்பு மாணவன்!
கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள கைரளி யோகா வித்யா பீடத்தின் சார்பில் யோகா சாதனை நிகழ்வு நடைபெற்றது.
By : Karthiga
கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கத்தை சார்ந்த செந்தில்குமார் செல்வி ஆகியோரின் மகன் எஸ். சிவமணி தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் .மாணவன் சிவமணி கடந்த இரண்டு ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் உள்ள கைரளி யோகா வித்யாபீடத்தில் யோகா பயிற்சியாளர் ராதாகிருஷ்ணனிடம் யோகா பயின்று வருகிறார். இவர் சின்ன ஓபுளாபுரத்தில் உள்ள 22 அடி அகலம் 34 அடி உயரம் 30 அடி அளவு தண்ணீர் நிரம்பிய கிணற்றில் 11 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து மச்சாசனத்தில் உலக சாதனை செய்துள்ளார்.
மாணவன் சிவமணியை மருத்துவர் கோவிந்தராஜ் தலைமையில் உள்ள மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்து அவர் சாதனை நிகழ்வை தொடர அனுமதித்த நிலையில் காலை 6. 55 மணிக்கு மேற்கண்ட கிணற்றில் மச்சாசனத்தில் மிதந்த படி உலக சாதனை முயற்சி தொடங்கினார். தொடர்ந்து அவர் உணவு உண்ணாமலும் நீர் அருந்தாமலும் கிணற்று நீரில் மிதந்தபடி யோகாசனம் மேற்கொண்டார். இவர் மேற்கொண்ட இவரது சாதனை முயற்சி 11 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்று மாலை 6 10 மணிக்கு முடிவுற்றது.
இவரது இந்த சாதனையை இந்தியா புக் ஆப் அச்சீவர்ஸ், வேர்ல்ட் புக் ஆஃப் அச்சீவர்ஸ், தமிழன் புக் ஆஃப் அச்சீவர்ஸ் ஆகிய சாதனை அமைப்புகள் அங்கீகரித்தன. தொடர்ந்து நடைபெற்ற சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டிஜே கோவிந்தராஜன் சாதனை மாணவன் சிவமணிக்கு நான்கு சாதனை புத்தகங்களின் சான்றிதழ்கள் பதக்கங்களை வழங்கி சிவமணியை பாராட்டும் போது அவரது கல்விக்கும் சாதனை நிகழ்வுக்கும் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
மேலும் நிகழ்வில் இந்தியா புக் ஆப் அச்சீவர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த துரை முத்து அரசன் வேர்ல்ட் புக் ஆஃப் அச்சீவர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் பிரசாத் தமிழில் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத்தைச் சார்ந்த கன்னியப்பன் ஏழுமலை ஆகியோர் மாணவன் சிவமணியை வாழ்த்தினார். கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .இந்த சாதனை நிகழ்வதற்கான ஏற்பாடுகளை கைரளி யோகா வித்யா பீடா ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.
SOURCE :Dinaboomi