Kathir News
Begin typing your search above and press return to search.

லயோலா கல்லூரி பாதிரி‌ மீது பாலியல் குற்றச்சாட்டு - தகுதி இல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதும் அம்பலம்.!

லயோலா கல்லூரி பாதிரி‌ மீது பாலியல் குற்றச்சாட்டு - தகுதி இல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதும் அம்பலம்.!

லயோலா கல்லூரி பாதிரி‌ மீது பாலியல் குற்றச்சாட்டு - தகுதி இல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதும் அம்பலம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 2:26 AM GMT

லயோலா கல்லூரி நிர்வாகத்திடம் சக பணியாளரான முன்னாள் மாணவர் சங்கத்தை நிர்வகிக்கும் ஒரு பாதிரியாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதைப் பற்றி புகார் செய்த ஒரு பெண்‌ ஊழியர் கல்லூரி நிர்வாகத்தால் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2010ம் வருடம் ஜூலை மாதத்தில் லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேரி ராஜசேகரன் என்ற பெண்மணி, பணியில் சேர்ந்து ஆறு‌ மாதங்களுக்கு பின் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த சேவியர் அல்போன்ஸ் என்பவர் சங்கத்திற்கு வந்த நிதியிலிருந்து ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் பணத்தை தனிப்பட்ட முறையில் அவர் நடத்தி வந்த அறக்கட்டளைக்கு திருப்பி விட்டதைக் கண்டுபிடித்துள்ளார். அங்கு ஆரம்பித்தன அவருடைய பிரச்சினைகள்.

கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட‌ நிலையில் கல்லூரி நிர்வாகமும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பிறரும் மேரியின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலும் இதுவரை அளிக்காததால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முன்னாள் பாம்பே மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் சல்தானா மேரிக்கு நீதி கிடைக்க உதவும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி A P சாஹி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் நீதித்துறை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இருப்பதால் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள தாமதம் தன்னை வருந்தச் செய்வதாக எழுதியுள்ளார்.

தனது மனுவில் பாதிரியார் அல்போன்ஸ் கல்லூரியில் வழங்கப்படும் உதவித் தொகையையும் தகுதியற்ற மாணவர்களுக்கு வழங்கி முறையற்ற செயலில் ஈடுபட்டார் என்று மேரி குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினைகளைப் பற்றி கடந்த 2013 ஆம் ஆண்டே கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் பாதிரியார் அல்போன்ஸின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மேரியின் புகாரை விசாரிப்பதாகக் கூறிய கல்லூரி முதல்வர் அதன் பின்னர் முன்னாள் மாணவர் சங்கம் நிதியை செலவழிக்கும் முன் பொருளாளரின் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கி இருக்கிறார். அப்போதிருந்தே பாதிரியார் அல்போன்ஸ் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்த ஒவ்வொருமுறையும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை துன்புறுத்தியதாக மேரி தெரிவித்துள்ளார். சில சமயங்களில் அவர் ஒரு பாதிரியாருக்கு கொஞ்சமும் பொருந்தாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவரது செயல்பாடுகள் தனது குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கும் அளவுக்கு சென்றதாகவும் மேரி கூறியுள்ளார். "இந்த விஷயத்தை பற்றி நான் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர்கள் என்னை சாந்தப்படுத்த முயற்சித்தார்களே தவிர பாதிரியார் மீது எந்த விதமான முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

பாதிரியார் அல்போன்ஸுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கல்லூரி நிர்வாகம் முன் வராததற்கு காரணம் அவர்கள் மறைமுகமாக அவரைக் காப்பாற்ற எண்ணியதால் தான் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. 2013ஆம் ஆண்டு கல்லூரியில் 'கல்லூரிப் பாதை' என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதற்கு தற்போது பிரபலங்களாக இருக்கும் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ள மேரி இந்த நிகழ்ச்சி கல்லூரியில் புதிதாக வர்த்தகத் துறை கட்டடம் கட்ட நிதி சேகரிக்கத் தான் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

மேரியும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த அவரது மகனும் மிக பிரயத்தனம் செய்து அந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய முயற்சித்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி சீட்டுகள் விற்பனை செய்வதோடு பெரிய பெரிய நிறுவனங்களையும் நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்ய அழைத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரின் உழைப்பையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாதிரியார் அல்போன்ஸ் அவர்களிடமிருந்து தான் தனிப்பட்ட முறையில் நடத்திவரும் அறக்கட்டளையின் பெயரில் நன்கொடையை எழுதி வாங்கியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை தனது குடும்பம், நண்பர்கள் என்று தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கி நிதி திரட்டும் முயற்சியையே பாழாக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. பாதிரியாரின் இந்த செயல்பாடுகளும் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. மேரி, பாதிரியார் அல்போன்ஸ் பற்றி தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அவரது பணியில் இருந்து மாறுதல் செய்யப்பட்டு கல்லூரி தலைவருக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் பாதிரியார் அல்போன்ஸ் தொடர்ந்து மேரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

மேரி, அல்போன்ஸின் செயல்பாடுகளை பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் மீண்டும் மீண்டும் புகார் செய்தபோது கல்லூரியின் பெயர் கெட்டு விடும் என்ற அச்சத்தில் மேரியை காவல்துறையில் புகார் அளிக்க விடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்ததாகக் கூறப்படுகிறது. அல்போன்ஸ் வேறொரு கல்வி நிறுவனத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படப் போவதாகவும் அது வரை காத்திருக்குமாறு மேரியிடம் கூறியுள்ளனர்.

இதற்கிடையே முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் ஒருவரை சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்த மேரியின் மகன் ஜோசப் டோமினிக்குக்கு எதிராக பொய் புகார் பதிவு செய்ய அல்போன்ஸ் தூண்டியதாக மேரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதத்தில், லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான கோவை நகர போலீஸ் கமிஷனராக இருந்த ஏ கே விஸ்வநாதன் அவர்களுக்கு தனது மகன் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளின் பின்னணி பற்றி விரிவாக விவரித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுகளைப் பற்றியும் குறிப்பிட்ட அவர், பாரபட்சமற்ற வகையில் அந்த புகாரின் மீது விசாரணை நடத்தப்பட‌ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேரி தாக்கல் செய்த மனுவில் விஸ்வநாதன் ஒரு மூத்த அதிகாரி என்பதால் அவராவது விசாரணையில் ஈடுபடுவார் என்ற எண்ணத்தில் அவரிடம்‌ இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். கமிஷனருக்கு மின்னஞ்சல் அனுப்பியதைப் பற்றி கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் அளித்துள்ளார். பாதிரியார் அல்போன்ஸ் மீது உருப்படியாக ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்ததாக மேரி கூறியுள்ளார்.

ஆனால் சில மாதங்களுக்கு பின் செப்டம்பரில் அல்போன்ஸை பணியிட மாற்றம் செய்வதற்கான வேலைகள் தொடங்கி விட்டதால் கல்லூரிக்கு வர வேண்டாம் என்றும் அவர் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் வந்தால் போதும் என்றும் கல்லூரி தலைவர் கூறியிருக்கிறார். வேலைக்குத் திரும்பிய பின்னர் வராத நாட்களுக்கும் சேர்த்து சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

இது நடந்த சில நாட்களில் பாதிரியார் அல்போன்ஸ் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேரி பின்னொரு நாள் கல்லூரிக்குச் சென்று எப்போது பணிக்குத் திரும்புவது என்று அறிய விரும்பிய போது சிறிது காத்திருக்குமாறும் தானே மேரியைத் தொடர்பு கொண்டு மறுசேர்க்கையைப் பற்றி தகவல் தெரிவிப்பதாகவும் கல்லூரித் தலைவர் உறுதி அளித்துள்ளார்.

ஆனால் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கல்லூரியில் இருந்து எந்த விதமான தகவலும் வரவில்லை. எனவே நேரடியாக கல்லூரிக்குச் சென்று முதல்வரை சந்தித்த மேரியிடம் நேரிடையாக எதுவும் கூறாமல் மறைமுகமாக இனிமேல் அவர் பணியில் சேர அழைக்கப்பட மாட்டார் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் கல்லூரி நிர்வாகத்துக்கு தனது பணியின் நிலையைப் பற்றி விசாரித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் மேரி. அதற்கும் எந்த பதிலும் வரவில்லை.

வழக்கமான முறையில் பணியில் நியமிக்கப்பட்டதால் எந்த வித விசாரணையும் நடத்தாமல் நோட்டீஸ் வழங்காமல் தீடீரென தன்னை பணியில் இருந்து நீக்க முடியாது என்று தனது மனுவில் வாதிட்டுள்ளார்.

பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம், 2013ன் படி நடத்தி இருக்க வேண்டிய விசாரணையை லயோலா கல்லூரி நிர்வாகம் இன்னும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணியிடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகார்களை விசாரிக்க விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்த நடைமுறைகளையும் கல்லூரி நிர்வாகம் பின்பற்றவில்லை என்று மேரி குற்றம் சாட்டியுள்ளார். மேரியின் வழக்கு தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.


Credits : Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News