நனவானது ஷியாம பிரசாத் முகர்ஜியின் “ஒரே இந்தியா” கனவு
நனவானது ஷியாம பிரசாத் முகர்ஜியின் “ஒரே இந்தியா” கனவு
By : Kathir Webdesk
காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய மோடி அரசு ரத்து செய்தது. நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை பற்றி ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு மைய இயக்குனர் அனிர்பன் கங்குலி எழுதிய கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு முறை காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம், ‛‛இந்திய தேசிய கொடிக்கு மரியாதை கொடுப்பீர்களா'' என சிலர் கேட்டனர். அதற்கு அவர், ‛‛அப்படியா, அந்தக் கொடியை நாங்கள் அங்கீகரிப்போம்'' என்று வேறு ஏதோ கொடியைப் பற்றி சொல்வதுபோல் பதில் அளித்தார்.
ஏற்கனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்த ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி காதுகளுக்கு அப்துல்லா கூறியது எட்டியது. பார்லிமென்டில் முழங்கிய அவர், ‛‛யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொடி இருக்கும். அது தான் சுதந்திர இந்தியாவின் தேசிய கொடி'' என்றார்.
இதற்கு பதில் அளித்த ஷேக் அப்துல்லா, ‛‛இரு கொடிகளையும் (காஷ்மீருக்கு என்று தனி கொடி இருந்தது) நாங்கள் சமமாக மதிப்போம்'' என்றார்.
‛‛நீங்கள் இரு கொடிகளையும் சமமாக நடத்த முடியாது. தேசிய கொடி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது. அந்த நாட்டுக்கு உட்பட்டது தான் காஷ்மீரும்'' என்று முகர்ஜி கர்ஜித்தார்.
370-ஐ நீக்காவிட்டால் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் என நம்பினார் முகர்ஜி. ஆனால் நேருவுக்கும் அப்துல்லாவுக்கும் இருந்த நெருக்கத்தால் அவரது கனவு தள்ளிப்போனது. சூழ்ச்சியால் சிறையில் அடைக்கப்பட்டு ஸ்ரீநகரில் இறந்தார். இறக்கும்வரை ஒரே தேசம் என்ற கோஷத்தை முன்வைத்தபடி இருந்தார்.
காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம், அவரது கனவு இப்போது நிறைவேறி உள்ளது. ஜனசங்கம் மற்றும் பா.ஜ.கவின் பல ஆண்டு போராட்டமும் அது தான். எதிர்காலத்தில் இந்த சட்டப்பிரிவை நீக்க முடியுமா என்று அப்போது சந்தேகம் எழுந்தபோது, சர்தார் வல்லபாய் படேல் ‛‛இந்திய அரசின் துணிச்சல், பலத்தைப் பொறுத்துதான் அது முடிவாகும். நமது பலத்தின் மீது நமக்கே நம்பிக்கை இல்லை என்றால் தனி நாடாக இருக்கவே நமக்கு தகுதி இருக்காது'' என்று கூறினார்.
அந்த துணிவும் தன்னம்பிக்கையும் இப்போதைய மத்திய அரசுக்கு உள்ளது என்பது தெரிந்து விட்டது. ‛‛வெற்று மிரட்டலுக்கு இடம் கொடுக்கக் கூடாது. நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேரம் பேசுவதற்கும் அப்பாற்பட்டது' என்பதில் மோடியும் அமித்ஷாவும் தெளிவாக இருந்தனர்.
கிட்டத்தட்ட 70 ஆண்டு நீண்ட போராட்டத்திற்குப்பின் கிடைத்த வெற்றி இது. தனது முதல் தேர்தல் அறிக்கையில் ‛‛காஷ்மீரின் நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மற்ற மாநிலங்களைப்போல, சிறப்பு அந்தஸ்து இல்லாமல் அதுவும் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தது.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவும் அவரது சகாக்களும் காஷ்மீர் சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடினர். தீனதயாளே இதை வலியுறுத்தி நிறைய எழுதினார். ஜனசங்கத்தின் 8-வது தலைவர் ரகுவீர், இது பற்றி எழுதும்போது, “காஷ்மீரின் ஆன்மாவும் உடலும் நாட்டுக்கு சொந்தம்” என்பதை மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
1991-இல், ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றும் நோக்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பா.ஜ.க நடத்திய யாத்திரையின்போது, ‛‛ஒரே நாடு'' என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது. இந்த யாத்திரையை, நரேந்திர மோடிதான் அப்போது ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினார்.
இந்த யாத்திரையைக் கண்டித்து சில கட்சிகள் பார்லிமென்டில் குய்யோ முறையோ என கூக்குரலிட்டபோது பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ‛‛கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒரே நாடு என்று கூறுவது தவறா? எக்காரணம் கொண்டு இந்தியா மீண்டும் துண்டாடப்படக் கூடாது என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் காஷ்மீர் என்று சொல்வதும் தவறா?” என்று கேட்டார்.
=====