SIR ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத காங்கிரஸ்!! திமுக கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறதா??

By : G Pradeep
தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக மற்றும் தவாக போன்ற கட்சிகள் ஈடுபட்ட நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸ் சார்பில் யாரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அக்கட்சியானது பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக அழைப்பு விடுத்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கு கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியானது இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் வேட்பாளரை அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற செய்ததாகவும், ஆனால் அந்தக் கட்சி அதையெல்லாம் மறந்து விட்டதாக கூறி வருகின்றனர்.
இதை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் மூத்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடப்பது தங்களுக்கு தெரியாது என்றும் இது குறித்த தகவலை திமுகவினர் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்று திமுக சார்பில் கூறப்பட்ட நிலையில் தற்பொழுது ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லை என்று கூறுவது எந்த வகையில் சாத்தியம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
SIR விவகாரத்தை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ்தான். அப்படி இருக்கையில் அதற்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாமல் இருந்தது தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
