சீர்காழி, ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதி வழிபாட்டு தலமாக மாற்றப்படும் - தருமபுரம் ஆதீனம்!
சீர்காழி சட்டை நாதர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதி வழிபாட்டு தலமாக மாற்றப்படும் என தர்மபுரம் ஆதீனம் கூறியுள்ளார்.
By : Karthiga
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
சட்டைநாதர் கோவிலில் யாகசாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டும்போது 22 ஐம்பொன் சிலைகள் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை கோவிலின் குபேர மூலையில் கிடைத்துள்ளன . முதன்முறையாக அதிக அளவு செப்பேடுகள் இங்குதான் கிடைத்துள்ளன. இந்த செப்பேடுகளில் திருஞான சம்பந்தர் திருமுறைகள் திருநாவுக்கரசரின் தேவார திருப்பதிகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முழுமையாக ஆய்வு செய்தால் சுந்தரரின் பதிகங்களும் இருக்க வாய்ப்புள்ளது.
ஒரு கோடிமுறை பதிகம் பாராயணம் செய்யும் பணி தொடங்கி தற்போது 75 லட்சம் வரை பக்தர்கள் பாராயணம் செய்துள்ளனர். இதன் பயனாக திருமுறை செப்பேடுகள் கிடைத்துள்ளன. தற்போது குடமுழுக்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். குடமுழுக்கு முடிந்த பின்னர் இந்த பொக்கிஷங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான உரிய வசதிகள் மடத்தின் சார்பில் செய்து தரப்படும். இந்த செப்பேடுகளை பாதுகாத்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஐம்பொன் சிலைகள் கிடைத்த இடத்தை வழிபாட்டுத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, கோவில் நிர்வாகி செந்தில் உட்பட பலர் உடன் இருந்தனர்.