சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் மாற்றப்பட்ட பொருள்: திருப்பங்கள் நடைபெறுமா?
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சை பழம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
By : Bharathi Latha
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறப்பு அம்சம் அங்குள்ள உத்தரவு பெட்டி ஆகும். இந்த கோவிலில் சிறப்பு அம்சமாக இறைவன் பக்தர்கள் கனவில் தோன்றி தெரிவிக்கும் பொருளை உத்தரவு பெட்டியினுள் பூஜை செய்து, அதனை மூலவர் முன்பாக உள்ள உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுவது. அவ்வாறு வைக்கப்படும் பொருள் எதிர்மறையான அல்லது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இந்த கோயிலில் விசேஷம்.
கடைசியாக நேற்று முன்தினம் கடலூரை சேர்ந்த பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி, 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரின் உருவப்படம் வைத்து பூஜை செய்து, பின்னர் உத்தரவு பெட்டிக்குள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி, 3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சம் பழங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. மேலும் உத்தரவு பெட்டியினுள் வைப்பதற்கு முன்பு பூ போட்டு பார்த்து பூஜை செய்யப்படுகிறது. வெள்ளைப்பூ சம்மதம் என்று அர்த்தம் ஆக கருதப்படுகிறது. எனவே பூ போட்டு பார்ப்பதை சாமியின் உத்தரவாக இவர்கள் கருதுகிறார்கள்.
இதனை தொடர்ந்து, உத்தரவு பெட்டிக்குள் வைத்திருந்த போகர் உருவப்படம் அகற்றப்பட்டு, 3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சம் பழங்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இறைவன் மீண்டும் பக்தர் கனவில் தோன்றி தெரிவிக்கும் வரை இந்த பொருட்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறுகிய இரண்டே நாட்களில் வைக்கப்பட்ட பூஜை பொருள் மாற்றப்பட்டது இதுவே முதல் முறை என்பது அந்த கோவிலில் நடந்த மற்றொரு சம்பவம்.
Input & Image courtesy: Dinamalar News