இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக பாகிஸ்தானில் இலங்கை நபர் எரித்துக்கொலை!
இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
By : Muruganandham
இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கை நபர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார்.
40 வயதான பிரியந்த குமார தியவடன, சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக வதந்தி பரவியது.
தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுத்தி எரித்துக் கொன்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஊழியர் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டிருந்ததால் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 11.35 மணியளவில் மீட்புதவி துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு செல்லும் முன்னரே பிரியந்த குமார தியவடன எரித்துக் கொல்லப்பட்டார்.
மேலாளருக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை முதலே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அனுமதி இல்லை. மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமாட்டார்கள் என பஞ்சாப் மாகாண முதலமைச்சர் உஸ்மான் பஸ்தார் தெரிவித்துள்ளார்.