Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!

மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!

மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Aug 2019 1:16 PM IST



அருண் ஜெட்லி, கடந்த 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி, புதுடெல்லியில் பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். தன்னுடைய தந்தையை போலவே சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார்.


டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கத்தில் மாணவ போராளியாக இருந்தார். அதன்பிறகு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பதவி வகித்தார்.


இந்திரா காந்தி ஆட்சியில் 1975 - 77 காலக்கட்டத்தில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது, ஜெட்லி சிறைவாசம் சென்றார். 1977ல் லோக்தந்திரிக் யுவ மோர்ச்சாவில் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அந்த சமயத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அப்போது டெல்லி ஏபிவிபி-க்கு தலைவராகவும், ஏபிவிபி-யின் அகில இந்திய செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.


அருண் ஜெட்லி, 1980-இல் பாஜகவில் இணைந்தார். அதே ஆண்டு பாஜகவின் இளைஞர் அணி தலைவராகவும், டெல்லி பாஜக செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1991-இல் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார்.


1998-ஆம் ஆண்டு இந்திய அரசின் பிரதிநிதியாக ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


அதன்பிறகு, வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சிக் கட்டிலுக்கு வந்த போது, அக்டோபர் 13, 1999-இல் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். முதலீடுகள் தொடர்பான கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையில், தனி அமைச்சகம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது. அதற்கு இணை அமைச்சராக அருண் ஜெட்லி நியமனம் செய்யப்பட்டார்.


2000-இல் சட்டம், நீதி, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.


2000-இல் கேபினட் அமைச்சராக உயர்ந்த போது, சட்டம், நீதி, நிறுவன விவகாரங்கள் துறை, கப்பல் கட்டுமான துறைகளின் பொறுப்பு வழங்கப்பட்டது.


ஜூலை 23, 2002-இல் பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் ஜனவரி 2003 வரை, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார்.


2000-ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.


இதையடுத்து 2006-இல் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஜூன் 3, 2009-இல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2012-இல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மூன்றாவது முறையாக தேர்வானார்.


குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்ததில் இருந்தே, அருண் ஜெட்லி அவருடன் நல்ல நட்புடன் இருந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் காரணமாக, குஜராத்தில் இருந்த அமித்ஷா டெல்லியில் தங்க நேரிட்டது. அப்போது அருண் ஜெட்லிதான் அமித்ஷாவிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். பல சமயங்களில் ஜெட்லியின் வீட்டில்தான் அமித்ஷா மதிய உணவு உண்பார்.


இந்த நட்பின் அடையாளமாகத்தான், மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, ஜெட்லிக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. 2014-இல் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பேற்றார்.


மே 2014 முதல் மே 2019 வரை, நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார்.


இதற்கிடையில் 2014 முதல் 2017 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 2014 முதல் 2016 வரை தகவல், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.


சமீபத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் கட்சி மேலிடத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News