“சன் டி.வி.யின் மன்னிப்பு கேட்பு வாரம்” - தினமும் இரவு 7.30 மணிக்கு காணத்தவராதீர்கள்! - வைரலானது மன்னிப்பு வீடியோ!!
“சன் டி.வி.யின் மன்னிப்பு கேட்பு வாரம்” - தினமும் இரவு 7.30 மணிக்கு காணத்தவராதீர்கள்! - வைரலானது மன்னிப்பு வீடியோ!!
By : Kathir Webdesk
சன் டிவி.யில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை மெட்டி ஒலி புகழ் திருமுருகன்தான் இயக்கி, நடித்து, தயாரித்து வருகிறார்.
கடந்த மே மாதம் 14, 15 தேதிகளில் ஒளிபரப்பான எபிசோடுகளில் ஆபாசமும், வக்கிரமும் எல்லை மீறி போனது. குறிப்பாக 15 நிமிட காட்சிகளில் கூட்டு கற்பழிப்பு போன்ற மிக மோசமான வசனங்களும் இடம் பெற்று இருந்தன.
இந்த தொடரில் வில்லியாக வரும் ரோஜா, தனது சொந்த சகோதரியையே கற்பழிப்பதற்காக பணம் கொடுத்து 4 பேரை அனுப்புவதும், அதுதொடர்பான காட்சிகளும், வசனங்களும் எல்லை மீறி அருவருப்பை ஏற்படுத்தியது.
அப்போது அவள் பேசும்போது, “நீங்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, உங்கள் இதயத்தில் இரக்கமோ பரிதாபமோ இருக்கக்கூடாது… அவள் எவ்வளவு கதறினாலும் பரிதாபமோ, தயவோ, கருணையோ இருக்கக்கூடாது” என்று வேறு கூறுகிறாள்.
கடந்த ஜூன் மாதம், 28-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், ரோஜாவை சீரழித்தவர்களின் பிறப்புறுப்பை எரித்துவிட, ராஜா திட்டம் தீட்டுகிறான்.
இந்த ஆபாசம் தொடர்பாக பி.சி.சி.சி (Broadcasting Content Complaints Council) விசாரணை நடத்தியதில், ஒழுங்குமுறை அமைப்பு விதித்த பல விதிகளை சன் டி.வி மீறியுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதனால், சன் டி.வி-க்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பி.சி.சி.சி உத்தரவிட்டது. மேலும், கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பப்படுவதற்கு 30 விநாடிகளுக்கு முன் மன்னிப்பு காட்சிகள் அடங்கிய கிளிப்புகள் ஒளிப்பரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதனால் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 6 நாட்கள் இந்த மன்னிப்பு காட்சிகள் அடங்கிய காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்று பி.சி.சி.சி உத்தரவிட்டுள்ளது.
இதனால் நேற்று (28-ஆம் தேதி) இரவு 7.30 மணிக்கு சன் டி.வி மன்னிப்பு கேட்கும் வைபவம் தொடங்கியது.
கல்யாண வீடு தொடரில் கதாநாயகனும், இயக்குனரும், தயாரிப்பாளருமான திருமுருகன், நேயர்களிடம் மன்னிப்பு கேட்கும் காட்சி காட்டப்பட்டது.
அந்த காட்சியில் திருமுருகன், “பி.சி.சி.சி ஆணைக்கு இணங்க, சன் தொலைக்காட்சி, கல்யாண வீடு தொடரில் மே 14 மற்றும் 15, 2019 தேதிகளில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளையும், கற்பழிப்பு காட்சிகளையும், ஜூன் 28 - ஆம் தேதி பழிவாங்கும் காட்சியையும் ஒளிபரப்பியதற்கு வருத்தம் தெரிவிக்கிறது. தொடரில் இந்த சம்பவங்கள் வெளிப்படுத்திய செய்தி சமூகத்திற்கு நல்லதல்ல. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறது” என்று குறிப்பிட்டார்.
வருகிற 28-ஆம் தேதிவரை இந்த மன்னிப்பு காட்சியை காட்டித்தான் ஆக வேண்டும்.
ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தபோது அனைவரையும் மிரட்டி அராஜகம் செய்தனர் மாறன் சகோதர்கள். எஸ்.சி.விக்காக பல கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களை காலி செய்தனர். மற்ற தொலைக்காட்சிகளுக்கு கொடுத்த இடையூறுகள், மிரட்டல்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சன் டிவியால் தமிழ் சினிமா துறையே அல்லோகலப்பட்டது. சினிமா தயாரிப்பாளர்கள் மிரட்டப்பட்டனர். சன் டிவியை தவிர வேறு சேனல்களுக்கும், திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமைகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை இருந்தது.
ஏராளமான திரையரங்குகளை தங்களில் கைவசம் வைத்துக் கொண்டு, மற்ற படங்களை வெளியிட முடியாதவாறு நெருக்கடி கொடுத்தனார். தாத்தா முதல்வர். கலாநிதி மாறன் மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர். சொல்லவா வேண்டும்?. தனி சாம்ராஜ்யமே நடத்தினார்கள்.
அந்த காலகட்டங்களில் இதுபோன்ற மன்னிப்பு நிகழ்வுகளை நினைத்து கூட பார்க்க முடியாது.
இப்போதும் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு, வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்கிறது சன் டி.வி.
“தமிழ் கலாச்சாரம், எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நமக்கு டி.ஆர்.பி ரேட்டிங் ஏற வேண்டும். பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும்” என்கிற மனப்பான்னையை பி.சி.சி.சி லேசாக அசைத்து உள்ளது.
இது போதாது. மேலும் கடுமையான நடவடிக்கைகள் பாரபட்சமின்றி எடுக்கப்பட வேண்டும். அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் மீதும் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழ் கலாச்சாரத்தை காக்க போராடும் அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
இப்போது சன் டிவி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது, மற்ற தொடலைக்காட்சி தொடர் இயக்குனர்கள், கதாசியர்கள், வசனகர்தாக்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எதை வேண்டும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் காட்சிப்படுத்தலாம் என்கிற தற்போதைய நிலை இனி மாறும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.