Kathir News
Begin typing your search above and press return to search.

“தமிழ் மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்டவர் சுஷ்மா”

“தமிழ் மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்டவர் சுஷ்மா”

“தமிழ் மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்டவர் சுஷ்மா”

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Aug 2019 1:25 PM GMT


இந்திய தமிழ் மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்பதுபோல கேட்டவர் சுஷ்மா ஸ்வராஜ் என்று முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.





. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டுப்பணிக்காக அர்ப்பணித்தவர். அவருடைய அரசியல் வாழ்க்கையானாலும், அரசின் ஆட்சியிலும் அவர் வகிக்காத பொறுப்புகளே இல்லை என்ற அளவிற்கு மாநில முதல்வராகவும், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும், தான் பொறுப்பு வகித்த துறைகளில் சாதனைகள் பல நிகழ்த்திக்காட்டியவர்.


பா.ஜ.க ஆட்சியில் இல்லாத காலத்தில் பாராளுமன்றத்தில் கட்சியின் எதிர்க்கட்சி தலைவராக சுஷ்மா இருந்தபோது, நான் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டேன்.


எந்தவொரு நிகழ்ச்சிக்காக தமிழகத்திற்கு அழைத்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக சம்மதம் தெரிவிப்பதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொள்வதோடு தனது முழு ஈடுபாட்டைகாட்டி நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்தவர்.


04.02.2011 அன்று வேதாரண்யம், பூங்காவனம் என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டபோது, பாதிக்கப்பட்ட அனைவரின் வீடுகளுக்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதலும், உதவித்தொகையும் வழங்கியதோடு, “இந்த பிரச்னை குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்” என கூறிச்சென்றார்.


நாடாளுமன்றத்தில், இலங்கை அரசுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து,” இனியும் இதுபோன்று நடக்கும் என்றால் அதற்கான எதிர்வினையை இலங்கை சந்திக்க தயாரக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை செய்தார்.


அதுவரை தமிழக மீனவர்கள் என்றிருந்த நிலையில் இந்திய தமிழ் மீனவர்கள் என்ற சொல் பதத்தை பயன்படுத்தியவர் சுஷ்மா சுவராஜ். நமது மீனவர்கள் இலங்கையினால் பாதிக்கப்பட்டபோது அடுத்த நாளே, தானாக முன் வந்து (தமிழக பாஜக கட்சித் தலைவராக இருந்த என்னிடம் கூட சொல்லாமல்) தில்லியில் மாபெரும் கண்டன கூட்டத்தை நடத்தியவர் சுஷ்மா.


இந்திய தமிழ் மீனவர்களின் துயரத்தை போக்க, இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு நான் கடல் முற்றுகை போராட்டம் நடத்தியபோது, அதனை வரவேற்றதுடன், எனக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார்.


31.01.2014 -இல், ராமேஸ்வரத்தில் நமது மீனவ சகோதரர்களின் நல்வாழ்விற்காக கடல் தாமரை மாநாடு நடத்தியபோது, அதில் சுஷ்மா கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பா.ஜ.கவின் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று அங்கேயே அறிவித்தார்.


இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்களின் நலனுக்காக தனி அமைச்சகம் அமைத்து மீனவ சமுதாயத்திற்கு பெருமைபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2014-இல் பதவி ஏற்றபின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புவகித்த சுஷ்மா, இந்தியாவின் கௌரவத்தையும், பெருமையும் உலக அரங்கில் நிலைநாட்ட தனது முழு கவனத்தையும் செலுத்தி ஓய்வின்றி பணியாற்றினார்.
தனது சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின்பும்கூட தனது பணியை அவர் நிறுத்தவில்லை. இலங்கை மற்றும் இந்திய தமிழ் மீனவர்களுக்கிடையே 7 முறை நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இலங்கை மற்றும் இந்திய அரசுக்கிடையே மீனவர்கள் நலன் குறித்து 6 முறை பேச்சுவார்த்தை நடந்தது.


நமது மீனவர்களின் துயரத்தை நிரந்தரமாக போக்க, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக இந்திய, இலங்கை அரசுகளின் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை இக்குழு சந்தித்து விவாதிக்க வேண்டும் என்பதோடு, அதிகாரிகள் மட்டத்திலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.


ரூபாய் 1500 கோடியில் இந்திய தமிழ் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு வசதியாக படகுகளை கட்ட திட்டத்தை வகுத்துகொடுத்து, அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன.


படகுகள் கட்ட தாமதமாகும், மீனவர்களிடம் ஏற்கனவே உள்ள படகுகளை மாற்றம் செய்தால் அது இலகுவாக இருக்கும் என நான் கூறியபோது, உடனடியாக ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கியதுடன், பரிச்சார்த்த முறையில் இதனை செயல்படுத்த 10 மீனவர்களின் விவரங்களை உடனே தாருங்கள் என கூறி அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்தார்.


பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய தமிழ் மீனவர்களின் கவலைகள் அனைத்தையும் தீர்த்துவைக்கும் வகையில் செயல்படுவதற்கு சுஷ்மா செயல்பட்டவிதம் என்றும் மறக்க முடியாது.


பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பதிவி ஏற்றவுடன், அதுவரை ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவைத்ததுடன், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நமது மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்தார்.


என்னுடைய பார்வைக்கு வந்த ஈரான், பஹ்ரைன், ஷல்ஸ், இலங்கை, ஏமன் போன்ற பல்வேறு நாடுகளில் சிறைபிடிக்கப்படும் நமது மீனவர்களை மீட்க, நான் எந்த நேரத்திலும் உரிமையோடு அழைத்து பேசும் அளவிற்கு எனக்கு சுதந்திரம் கொடுத்ததுடன் பல மீனவர்களை மீட்கவும் உறுதுணையாக நின்றார்


நம்முடைய மீனவர்கள் இலங்கை அரசினால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட போது, நானும் அவர்களின் விடுதலைக்காக சுஷ்மாவிடம் பேசியபோது, “நமது மீனவர்களை கொஞ்சம் கைதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள், நான் ஓவ்வொரு முறையும் நமது மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்பதுபோல கேட்கிறேன்” என பலமுறை கூறியுள்ளார். பெற்ற தாய் தன் மகனுக்கு கஷ்டம் வரும்போது எப்படி துடிப்பாளோ அந்த உணர்வை, அந்த தாய் உள்ளத்தை சுஷ்மாவிடம் நான் எப்போதும் கண்டுள்ளேன்.


இந்திய தமிழ் மீனவர்கள் சிறைபிடிப்பு, கைது, மரணம் என அவர்களின் குடும்பங்களின் துயரங்கள் குறித்து எந்தநேரத்திலும், ஏன் நடு இரவிலும்கூட அவருடன் பேசி இருக்கிறேன். அவரும் அடுத்தக் கட்டமாக என்ன செய்ய வேண்டும் என எனக்கு அறிவுரையும் வழங்கி இருக்கிறார்.


இந்திய தமிழ் மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்பதுபோல கேட்டவர் சுஷ்மா ஸ்வராஜ்.


ஒரு அமைச்சர், ஒரு கட்சி தலைவர் என இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழர்களின் துயர்துடைத்த தாயாக அவரை நான் பார்க்கிறேன். தமிழர்களின் மனதில் அன்றைய இலங்கை அதிபர் ராஜபட்சே பற்றி எத்தகைய சிந்தனை இருந்ததோ, அதே உணர்வுடனே அவரை எதிர்கொண்டார்.


இத்தகைய மேன்மைகொண்ட ஒரு தாயை இழந்த துயரத்தை நான் அடைகிறேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல் அவரது இழப்பு கட்சிக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு என்பதைவிட தமிழர்கள், குறிப்பாக மீனவ சகோதரர்கள் ஓவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் அவரது மறைவு ஓர் பேரிழப்பாக நான் கருதுகிறேன்.


இவ்வாறு பொன்.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News