போலி ஆவணங்கள் பயன்படுத்துவதை தடுக்க தமிழக அரசின் பலே திட்டம்
போலி ஆவணங்கள் பயன்படுத்துவதை தடுக்க தமிழக அரசின் பலே திட்டம்

தமிழகத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்து கொள்வதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைக்கான அரசாணையின்படி, நில உரிமையாளர்கள், தங்கள் சொத்துக்களை விற்க விரும்பினால் சொத்து தொடர்புடைய தாலுக்கா அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும்.
அங்கு தாங்கள் விற்பனை செய்ய விரும்பும் சொத்துக்கள் குறித்து விண்ணப்பித்து, அதன் புலப்படம் தொடர்பான
சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற வேண்டும். இது தொடர்பாக நில அளவையாளர் உரிய விசாரணை நடத்தி, தற்காலிக உட்பிரிவு தொடர்பான ஆவணங்களை இணைய வழி தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார்.
அதன் பின்னர் நில உரிமையாளர் தனது நிலப் பரிவர்த்தனையை சார்பதிவகத்தின் மூலம் மேற்கொள்ள முடியும் என்றும், இதன் பின்னர் இணைய வழியிலான பட்டா மாறுதல் விவரங்கள் மீண்டும் புல தணிக்கை ஏதுமின்றி தொடர்புடைய ஆவணங்களில் பதிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டமானது இரண்டு மாவட்டங்களில் உள்ள நான்கு வட்டங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள உத்தரவில்,
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் தொடா்பான சொத்துகளை பத்திரப் பதிவு செய்வதை தவிா்க்கும் விதமாக பத்திரப் பதிவுக்கு முன்பே உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் புதிய அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் தனது பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளாா். சென்னையில் உள்ள தேசிய தகவலியல் மையத்தின் மூலமாக இதனை செயல்படுத்தலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.
அவரது பரிந்துரைகள் தொடா்பாக பத்திரப் பதிவுத் தலைவருடன் ஆலோசிக்கப்பட்டது. இதன்பின்பு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய திட்டத்தை சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் ஓசூா் வட்டங்களிலும், பெரம்பலூா் மாவட்டம் ஆலத்தூா் மற்றும் பெரம்பலூா் ஆகிய வட்டங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.