சிறுவாச்சூரில் சிலைகள் உடைப்பு- தமிழ்நாடா தலிபான் நாடா என்று கொதிக்கும் இந்துக்கள் !
By : Shiva
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள கோவிலில் அய்யனார், செல்லியம்மன், கருப்பசாமி உள்ளிட்ட கடவுள் சிலைகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் காவல் துறையில் புகார் அளித்ததை அடுத்து இத்தகைய ஈனச் செயலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இந்தக் கோவிலின் பிரதான தெய்வமான மதுரகாளியம்மன் காஞ்சி சங்கராச்சாரியாரின் குலதெய்வம் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் பல லட்சம் இந்துக்களின் குலதெய்வமாக விளங்கும் மதுர காளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த கோவிலின் உப கோவில்களான அருகில் உள்ள கோவில்களும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அவற்றுள் ஒரு கோவிலில் தான் அய்யனார், செல்லியம்மன், கருப்பசாமி, பெரியசாமி, சப்த கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
மகாளய அமாவாசை என்று காலையில் பூஜை செய்யச் சென்ற பூசாரியும் கோவிலுக்கு சென்ற பக்தர்களும் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த சிலைகளை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இஸ்லாமிய ஆண் ஒருவர் கோவில் தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பூட்டை உடைத்து தேர்களுக்கு தீ வைத்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. "இப்போது விட்டாலும் தேரை மீண்டும் கொளுத்துவேன்" என்று அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த சம்பவத்தில் அந்த இஸ்லாமியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி காவல் துறையினர் விசாரணையை திசை திருப்புவதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர். இப்போது கோவில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது காவல்துறையின் இந்த அலட்சிய நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவாக இருக்கக் கூடும் என்ற கருத்து இந்துக்கள் மத்தியில் நிலவுகிறது.
கடந்த சில மாதங்களில் சோழர்கால கோவிலில் சிலைகள் தலை துண்டிப்பு, அம்மன் சிலைகள் உடைப்பு, கோவில் தேர்தலுக்கு தீவைப்பு என்று தொடர்ந்து பல இந்து விரோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்து விரோதப் போக்கு கொண்ட நாத்திக கட்சியான திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
Source: Hindu Tamil
Image Courtesy: Twitter