தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு!
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு!

பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தி.மு.க இளைஞரணி சார்பாக அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். தி.மு.க-வின் சாதனைகளை பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி தி.மு.க-வினால்தான் பட்டியலின மக்கள் உயர் பதவிகளுக்கு சென்றுள்ளனர். நீதிபதிகளாகவும், அரசு உயர்பதவிகளுக்கும் பட்டியலின மக்கள் சென்றது தி.மு.க போட்ட பிச்சை என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
"வட மாநிலத்தினர் எல்லாரும் முட்டாள்கள். அறிவே இல்லாதவர்கள். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். மகாராஷ்டிராவில் ஹரிஜன் பிரிவை சேர்ந்த ஒருவர்கூட இப்போதுவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் நிலை வேறு. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி ஆதி திராவிடர் உட்படப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலரை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணி அமர்த்தியுள்ளார். இவையெல்லாம் தி.மு.க அவர்களுக்குப் போட்ட பிச்சை" என்று கூறினார்.
இதுபற்றி ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்.எஸ். பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.