நல்ல கருத்துக்களை பேசுவதால் ஏற்படக்கூடிய நற்பயன்கள் - விளக்கும் ஜென் கதை
நல்ல கருத்துக்களை பேசுவதால் ஏற்படக்கூடிய நற் பயன்கள் பற்றியும் தீய கருத்துக்களை பேசுவதால் ஏற்படக்கூடிய தீமைகளை பற்றியும் ஒரு ஜென் கதை விளக்குகிறது.
By : Karthiga
வாரணாசியை ஆட்சி செய்த பிரம்மதத்தரின் அமைச்சர் போதி சத்துவர் கூர்மதி கொண்டவர். பிரம்மதத்தரின் பட்டத்து யானை மகிலா முகன். இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட மகிலாமுகன் எல்லோரிடமும் அன்பாக பழகி வந்தது. ஒரு நாள் நள்ளிரவில் திருடர்கள் சிலர் யானை கொட்டடி அருகே வந்து நின்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். நாம் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். நமக்கு இடையூறு தருபவர்களை தயவு தாட்சண்யம் இன்றி கொள்ள வேண்டும். என்ற அவர்களது பேச்சு மகிலாமுகனின் காதுகளிலும் விழுந்தது. இப்படி திருடர்கள் யானை கொட்டடியில் பதுங்கி தங்களுக்குள் பேசிக்கொள்வது அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது. தினமும் திருடர்களின் பேச்சை கேட்டு வந்த மகிலாமுகன் யானை இவர்கள் நமக்காகவே போதிக்கின்றனர் போலும் என்று எண்ணிக் கொண்டது. ஒருநாள் பாகன் ஒருவன் தன்னருகே வர அவனை துதிக்கையால் தூக்கி அடித்துக் கொன்றது. பாகனின் உறவினர்கள் பிரம்மதத்தரிடம் வந்து முறையிட்டனர்.
மன்னருக்கு அதிர்ச்சி சாதுவாக இருந்த மகிலாமுகன் திடீரென்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வது ஏன் என்று குழம்பினார் . முடிவில் அமைச்சர் போதிசத்துவரை வரவழைத்து அவரிடம் நடந்ததை விவரித்து தகுந்த தீர்வு காணும் படி பணித்தார். யானை கொட்டடிக்கு வந்த போதி சத்துவர் மகிலாமுகனை கூர்ந்து கவனித்தார். வியாதிக்குரிய அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. உடனே அங்கிருந்த பாகர்களிடம் "இங்கே புதிய ஆசாமிகள் எவரும் வந்தார்களா?"என்று கேட்டார். அவர்கள் சில தினங்களாக நள்ளிரவில் சிலர் கொட்டடிக்கு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர் என்றார்கள். நள்ளிரவில் கூடுபவர்கள் தீயவர்களாகவே இருக்க வேண்டும் என்று எண்ணிய போதி சத்துவர் மன்னரிடம் விவரங்களை கூறினார்.
அத்துடன் ஒழுக்கத்தில் சிறந்த சான்றோர்களை வரவழைத்து கொட்டடிக்கு அருகில் அமர்ந்து நல்ல விஷயங்களைப் பற்றி பேச சொல்லலாம் என்றார். மன்னரும் சம்மதித்தார். அதன்படி நல்லோர்களும் அந்தணர்களும் யானை கொட்டடியில் கூடி பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாள்தோறும் அவர்கள் நன்னடைத்தகள் நீதிநெறிகள் பற்றி உரையாடினர். எவரையும் துன்புறுத்துவதோ கொல்வதோ கூடாது. எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும் என்பன போன்ற அவர்களது பேச்சுகளும் மகிலாமுகன் யானையின் காதில் விழுந்தன. நமக்காகவே போதிக்கின்றனர் என்று கருதியை யானையை படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பியது. மன்னருக்கு ஆச்சரியம். யானை மாறியது ஏன்?அது பழைய நிலைக்குத் திரும்பியது எப்படி என்று போதி சத்துவரிடம் கேட்டார். அரசே எப்போதும் எல்லோரும் நல்ல கருத்துக்களை பேச வேண்டும் என்று பெரியோர் கூறுவது இதற்காகவே. திருடர்களது தீய பேச்சுகளை கேட்ட யானை அவற்றை ஏற்று அவ்விதமே செயல்பட்டது. பிறகு அந்தணர்களது நல்லுரைகளை கேட்டு சாதுவாகவும் அன்பாகவும் மாறிவிட்டது. என்று விளக்கினார் போதி சத்துவர்.