Kathir News
Begin typing your search above and press return to search.

'தமிழ் பாடத்தை கட்டாயமாக்குங்கள்' - நீதிமன்றம் உத்தரவிடும் நிலைக்கு சென்ற தமிழக அரசு

கட்டாய தமிழ் பாட சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய வழக்குக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னையை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் பாடத்தை கட்டாயமாக்குங்கள் - நீதிமன்றம் உத்தரவிடும் நிலைக்கு சென்ற தமிழக அரசு

KarthigaBy : Karthiga

  |  22 Dec 2022 6:45 AM GMT

தமிழ்நாட்டில் தமிழ்மொழி பாடத்தை கட்டாயமாக்கி கடந்த 2006 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிகாலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. 2007- 2008. ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் தொடங்கி ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டு 2015 -16ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த சட்டம் தமிழ்நாட்டில் முறையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி சென்னை ஐகோர்ட்டில் ராகவன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது :-


தமிழ் ஆசிரியர் பதவி நியமனங்களுக்கு உரிய ஒப்புதலை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என்பதால் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார் தெரிவித்துள்ளன. 2015 - 16ஆம் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ள பள்ளிகளிலும் கூட பத்தாம் வகுப்பு தமிழ் கட்டாய பாட சட்டம் அமல்படுத்தப்படும் என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே உறுதி அளித்தது. இந்த நிலையில் அதை அமல்படுத்த முறையான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. கேரளா, கர்நாடகா, மராட்டியம் , பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளை கட்டாயமாக்கி கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்ட பிரிவுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தமிழ் கட்டாய பாடம் தொடர்பான சட்டத்தில் அது போல் கடுமையான பிரிவுகள் இல்லை என்பதால் இந்தச் சட்டம் நீர்த்து போகும் வகையில் உள்ளது.


இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் தீவிரமாக அமல்படுத்தாத காரணத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ஒன்பது லட்சம் மாணவர்களில் 47,055 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். எனவே தமிழ் கட்டாய பாடச் சட்டம் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கல்வி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி டி.ராஜா நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் இந்த வழக்குக்கு தமிழ்நாடு அரசு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News