Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகள் நலன் மேம்பட பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்கும் மத்திய அரசு

அதிகமான இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்கிறது மத்திய அரசு

விவசாயிகள் நலன் மேம்பட பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்கும் மத்திய அரசு
X

KarthigaBy : Karthiga

  |  2 Sep 2022 10:00 AM GMT

அதிகமான காப்பீடு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இயற்கை சீற்றங்களால் பயிர் சேதம் மற்றும் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பது இதன் நோக்கம். இதன்படி பருவம் மற்றும் பயிர்களுக்கு ஏற்ப விவசாயிகள் பிரீமியம் தொகையில் அதிகபட்சம் 5 சதவீதத்தை செலுத்த வேண்டும் .மீதித் தொகையை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து அளிக்கின்றன .

2019 -2020 பயிர் ஆண்டு முதல் 2022- 2023 பயிர் ஆண்டு வரையிலான காலத்துக்கு 18 காப்பீட்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் விவசாயிகள் அதிகமான இழப்பீடு கோரியதால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது .அதனால் 2021- 2022 ஆம் ஆண்டில் 8 நிறுவனங்கள் வெளியேறிவிட்டன.

தற்போது 10 காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஆனால் நிறுவனங்கள் இடையே போட்டி குறைந்து விட்டதால் அந்த நிறுவனங்கள் பிரீமியம் தொகையை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் இந்த பயிர் காப்பீட்டு திட்டம் காப்பீடு நிறுவனங்களுக்கு தான் நன்மை பயப்பதாகும் ,விவசாயிகளுக்கு நன்மை செய்யவில்லை என்று மாநில அரசுகள் கருத்து தெரிவித்தன.

இதையடுத்து கடந்த ஆண்டு மத்திய வேளாண் அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவை அமைத்தது. விரிவான ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த இருவித அணுகுமுறைகளை சிபாரிசு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகமான காப்பீடு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் பிரீமியம் தொகையை குறைக்கவும் இந்த மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளது.

மத்திய மந்திரிசபை ஒப்புதலுக்கு பிறகு 2023- 2024 ஆம் ஆண்டிலிருந்து இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News