சிறிய நகரங்களின் வளர்ச்சியே வளர்ந்த இந்தியா இலக்கை அடைய ஆதாரம்- பிரதமர் மோடி!
வளர்ந்த இந்தியா இலக்கை அடைய சிறிய நகரங்களின் வளர்ச்சி முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
By : Karthiga
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யவும் அதன் நோக்கங்களை முழுமையாக பூர்த்தியடைய செய்யவும் சிறப்பு யாத்திரை ஒன்றை நாடு முழுவதும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வளர்ந்த இந்தியா தீர்மான யாத்திரை என்ற பெயரில் நடந்து வரும் இந்த நிகழ்வில் மோடியின் வாக்குறுதி வாகனங்கள் என்ற பெயரில் வலம் வரும் வாகனங்கள் நாட்டின் தொலைதூர கிராமங்களுக்கும் சென்று திட்டங்களின் பயனை வழங்கி வருகிறது.
ஆனால் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் இந்த யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது :-
வளர்ந்த இந்தியா என்ற உறுதியுடன் மோடியின் உத்தரவாத வாகனம் நாட்டின் ஒவ்வொரு முறையையும் சென்றடைகிறது. ஒரு மாதத்தில் இந்த யாத்திரை வாகனங்கள் ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு சென்றடைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சிறிய நகரங்கள் ஆகும். சுதந்திரத்திற்கு பிறகு நீண்ட காலமாக வளர்ச்சியின் பலன்கள் ஒரு சில பெரிய நகரங்களுக்கு மட்டுமே கிடைத்தன. ஆனால் எங்கள் அரசு சிறிய நகரங்களில் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இது வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தும்.
வளர்ந்த இந்தியாவுக்கு சிறிய நகரங்களின் வளர்ச்சி முக்கியமாகும். மக்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் எளிதாக்க ஒரு குடும்ப உறுப்பினரை போல எங்கள் அரசு முயற்சிக்கிறது. ஏழைகள் விவசாயிகள் சிறு வணிகர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு உதவியது எங்கள் அரசு. அனைவரின் நம்பிக்கை முடியும் இடத்தில் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது.
அரசின் பல்வேறு திட்டங்களில் பலன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இந்த யாத்திரையை நான் கொடியசைத்து தொடங்கி வைத்தாலும் இன்று அந்த யாத்திரைக்கு நாட்டு மக்கள் தலைமை ஏற்றுள்ளனர் என்பதே உண்மை. பயணம் நிறுத்தப்படும் இடத்தில் பிற கிராமங்கள் அல்லது நகரங்களை சேர்ந்தவர்கள் பயணத்தை தொடங்குகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI