மதுரையில் இறந்த பெண்ணின் உடலை உயிர்ப்பிக்க ஜெபம் செய்த குடும்பம் - மூடத்தனத்தின் உச்சம்!
இறந்த பெண்ணின் உடலுடன் இரண்டு நாட்களாக இருந்த டாக்டர் குடும்பத்தினரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது
By : Karthiga
மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவருடைய மனைவி மாலதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு எம்.டி படித்து வருகிறார். மற்றொருவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த எட்டாம் தேதி இரவு அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வீட்டிற்கு எடுத்து வந்தனர்.பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவரை ஜபம் செய்து உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். உடனே எஸ். எஸ். காலனி போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினார். பின்னர் போலீசார் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு இடையில் அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர். அதன் பின்னர் மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார்.இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்துச் செல்வதாக கூறினர்.அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறு மாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டனர்.
பின்னர் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் வந்துவிட்டதால் சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் சென்றுவிட்டனர் என தெரிவித்தனர். மரணம் அடைந்த பெண்ணின் உடலுடன் இரண்டு நாட்களாக இருந்த டாக்டர் குடும்பத்தினரால் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்பட்டது.