உளவு பார்க்க சீனா அனுப்பிய ராட்சத பலூன் -அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவை உளவு பார்க்க சீனா ராட்சத பலூனை அனுப்பிய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
By : Karthiga
அமெரிக்கா சீனா இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு வலுத்து வருகிறது. குறிப்பாக டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகள் இடையேயான உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு சிதைந்தது. ட்ரம்புக்கு பிறகு ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜோ பைடனும் சீனா விவகாரத்தில் முந்தைய அரசியல் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவதால் மோதல் தொடர்கிறது. வர்த்தக உறவில் ஏற்பட்ட மோதல் பல்வேறு விவகாரங்களில் விரிவடைந்து தற்போது பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது . குறிப்பாக தைவான் விவகாரத்தில் இரு நாடுகளும் கீரியும் பாம்புமாக மோதி வருகின்றன.
இந்த நிலையில் சீனாவின் உளவு பலூன் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவுக்கு மேல் பறந்து வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேற்கு அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தின் வான்பரப்பில் வெள்ளை நிற ராட்சத பலூன் பறந்துவருவதாக அமெரிக்காவின் இராணுவ தலைமையகமா பென்டகன் தெரிவித்துள்ளது .அமெரிக்காவில் மொத்தம் உள்ள மூன்று அணு ஆயுத தளங்களில் ஒன்று மொன்டானா மாகாணத்தில் அமைந்துள்ளது.
அதனை கண்காணிக்கும் முயற்சியிலேயே சீன உளவு பலூன் மொன்டானா மாகாணத்தில் பறந்து வருவதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் வெளியானதும் ராணுவ மந்திரியி லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க கூட்டு படைகளின் தலைவர் ஜெனரல் மார்க்மில்லி உள்ளிட்ட உயர் மட்ட ராணுவ தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது ராட்சத பலூனை சுட்டு வீழ்த்த அவர்கள் முடிவு செய்தனர். எனினும் ராட்சத பலூனை சுட்டு வீழ்த்தும் போது அதன் சிதைவுகள் தரையில் விழுந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்பதால் அந்த முடிவை கைவிட்டனர். இது குறித்து பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சீனாவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் ராட்சத உளவு பலூனை சுட்டு வீழ்த்த வெள்ளை மாளிகை ஒருவேளை உத்தரவிட்டால் அதை செய்ய எப் -22 உள்ளிட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.எனினும் அது தரையில் இருக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் பலூனை சுட்டு வீழ்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் சீன உளவு பலூனால் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்பதை அமெரிக்க உளவுத் துறை உறுதி செய்துள்ளது. ஏனெனில் உளவு பலூன் தற்போது எங்கு உள்ளது மற்றும் அது எங்கு கடந்து செல்கிறது என்பதை அதிகாரிகள் சரியாக அறிவார்கள். அதோடு அந்த பலூன் முக்கிய தகவல்களை சேகரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அந்த பலூன் தற்போது விமானங்கள் இயக்கப்படும் உயரத்திற்கு மேல்தான் பறந்து வருகிறது. எனவே விமான போக்குவரத்துக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. மேலும் இந்த விவகாரத்தின் தீவிர தன்மை சீன அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.