அனைவரும் அறிந்த பழனி மலையின் கிழக்கே அறியாத இடும்பன் மலை தோன்றிய வரலாறு
பழனி மலை, இடும்பன் மலை என இரண்டு மலைகள் இங்கு உள்ளன. இதில் பழனி மலையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார் . பழனி மலைக்குக் கிழக்கே இடும்பன் மலை உள்ளது.
By : Karthiga
பழனி மலைக்குக் கிழக்கே இடும்பன் மலை உள்ளது. இதன் அடிவாரத்தில் இடும்பன் கோவில் இருக்கிறது. பழனி மலையை 'சிவகிரி 'என்றும் இடும்பன் மலையை 'சக்திகிரி ' என்றும் தல வரலாறு குறிப்பிடுகிறது. ஒருமுறை கயிலாயத்திலிருந்து சிவகிரி ,சக்திகிரி மலைகளை சிவபெருமான் அகத்திய முனிவரிடம் கொடுத்தார். அவர் அந்த இரு மலைகளையும் இடும்பனிடம் அளித்து பொதிகை மலைக்கு கொண்டு செல்ல கட்டளையிட்டார் .
அதை ஏற்று இடும்பன் இரு மலைகளை காவடி போல் கட்டி தூக்கி சென்றான். திருஆவினன்குடியை அடைந்தபோது இடும்பனுக்கு களைப்பு ஏற்பட்டது. இதனால் மலைகளை இறக்கி வைத்து விட்டு தன் மனைவி இடும்பியுடன் களைப்பாறினான். மீண்டும் மலைகளை தூக்கம் முயன்ற போது முடியவில்லை.
அப்போது அங்கு தோன்றிய முருகப் பெருமான் இந்த மலைகள் இங்கேயே இருக்கட்டும். இதில் நாம் எழுந்தருளி இருப்போம் .நீ அடிவாரத்தில் காவல் புரிவாய். நீ மலைகளை காவடியாய் தூக்கி வந்தது போல் காவடி தூக்கி வந்து என்னை வழிபடும் பக்தர்களின் இன்னல்கள் அகலட்டும் என்று அருளினார்.