திருப்பதி கோவில் சொத்து மதிப்பு முதல் முறையாக அறிவிப்பு - ஏழுமலையானுக்கு இத்தனை கோடி சொத்துக்களா?
திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூபாய் இரண்டரை லட்சம் கோடி என்ற தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
By : Karthiga
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலகப் புகழ் பெற்றது. தினம் தோறும் உலகமெங்கும் இருந்து இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்கு மக்கள் காணிக்கைகளை குவிக்கிறார்கள். உலக புகழ் பெற்ற திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூபாய் இரண்டரை லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவில் 1933 ஆம் ஆண்டு உருவான காலம் தொட்டு இப்போதுதான் முதல் முறையாக அதன் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிரபல தகவல் சேவை நிறுவனமான விப்ரோ, உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி மற்றும் ஐ.ஓ.சி ஆகியவற்றின் சந்தை மூலதனத்தை விட அதிகம். திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 10 1/4 டன் தங்கம், 2 1/2டன் தங்க நகைகள் பல்வேறு வகைகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.
வங்கிகளில் சுமார் 16,000 கோடி டெபாசிட்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் இந்த கோவிலுக்கு 960 சொத்துக்கள் உள்ளன. திருப்பதி கோவிலை விட அதிக சொத்து இரண்டு டஜன் கம்பெனிகளுக்கு மட்டுமே இருக்கின்றன .இவற்றில் முக்கியமானவை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ,ஹெச்.டி.எ.ஃப்.சி வங்கி, இன்போசிஸ், ஐ. சி. ஐ .சி. ஐ வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், பாரத ஸ்டேட் வங்கி, பாரதி ஏர்டெல், ஐ.டி.சி ஆகும். மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் காணிக்கையாக தருகிற ரொக்கம், தங்கம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. வட்டி வருமானமும் அதிகரித்து வருகிறது.இதனால் தேவஸ்தானத்தின் செல்வம் தொடர்ந்து பெருகி வருகிறது என தெரிவித்தார். திருப்பதி கோவிலில் நடப்பு 2022 - 2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ரூபாய் 3100 கோடி ஆகும். இந்த நிதியாண்டில் வங்கி வட்டியாக ₹668 கோடி வருமானம் எதிர்பார்க்கப்படுவதாகவும், சுமார் இரண்டரை கோடி பக்தர்கள் மூலம் உண்டியல் காணிக்கை வடிவில் ரூபாய் ஆயிரம் கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .திருப்பதி கோவில் சார்பில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, ஹரியானா மராட்டியம், டெல்லி மாநிலங்களில் நிறைய கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.