சுரங்க பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்கள் பேசிய வீடியோ வெளியீடு- நலமுடன் தொழிலாளர்கள்!
உத்தரகாண்ட் சாலை பணியின் போது ஏற்பட்ட விபத்தில் குகைக்குள் சிக்கிய 41 பேரும் நலமுடன் உள்ளனர். தொழிலாளர்கள் பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
By : Karthiga
கடந்த 12-ஆம் தேதி சாலை பணிகள் நடந்து கொண்டிருந்தபோது சுரங்கப்பாதை இடிந்து விழுந்து அப்போது பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் அந்த பகுதியில் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க மீட்பு பபடையினர் இடைவிடாது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த பகுதிக்குள் துளை இட்டு இரும்பு குழாய்களை செலுத்தி அவற்றின் வழியாக தொழிலாளர்களை மீட்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இடுபாடுகளுக்கிடையே நான்கு அங்குல குழாய் பயன்படுத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஆறு அங்குல குழாய் இடுபாடுகளுக்கு இடையே 53 மீட்டர் தூரத்துக்குள் செலுத்தப்பட்டது. இதன் மூலம் சப்பாத்தி , குருமா , கஞ்சி , கிச்சடி துண்டு போடப்பட்ட ஆப்பிள், ஆரஞ்சு வாழைப்பழங்கள் போன்ற அதிக அளவிலான உணவை அனுப்பக்கூடிய நிலை ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு செல்போன்களையும் சார்ஜர்களையும் அனுப்பலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே வாக்கி டாக்கிகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த குழாய் வழியாக சிக்கி உள்ள தொழிலாளர்களுடன் ஓரளவு எளிதாக பேச முடிவதாக அவர்களது குடும்பத்தினரும் உறுப்பினர்களும் தெரிவித்தனர் . ஜெனிவாவை சேர்ந்த சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்டு டிக்சும் சுரங்க பாதை பகுதிக்கு வந்து ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். பத்தாவது நாளாக நேற்று முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது.
புதிதாக சேர்க்கப்பட்ட 6 அங்குல குழாய் வழியாக அனுப்பப்பட்ட ஒரு எண்டோஸ்கோபி கேமரா மூலம் எடுக்கப்பட்ட தொழிலாளர்களின் முதல் வீடியோவை மீட்பு படையினர் நேற்று வெளியிட்டனர். டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட இந்த கேமரா சுரங்கப்பாதை பகுதிக்கு நேற்று முன் தினம் மாலை வந்து சேர்ந்தது இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில் சுரங்க பாதைக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்கள் வெள்ளை மஞ்சள் ஹெல்மட் அணிந்தபடி உள்ளே அனுப்பப்பட்ட உணவுகளைப் பெற்றுக் கொள்வதும் ஒருவருடன் பேசியபடி இயல்பாக இருப்பதும் பதிவாகியுள்ளது.
மேலும் கேமரா லென்ஸை துடைத்துவிட்டு அதன் முன் ஒருவரின் ஒருவராக வந்து முகத்தை காட்டும் படி கூறப்படுவதையும் வாக்கிடாக்கியை பயன்படுத்துமாறு சொல்லப்படுவதையும் கேட்க முடிந்தது. இந்த வீடியோ மூலம் தொழிலாளர்களின் முகங்களை பார்த்து சுரங்கபாதைக்கு வெளியே கவலையோடு காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பது உறுதியாக இருப்பதால் மீட்பு பணி வேதம் எடுத்துள்ளது. தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
SOURCE :DAILY THANTHI