Kathir News
Begin typing your search above and press return to search.

இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்த வினோத கட்டுப்பாடு விதித்த கிராமம்- ஒரே ஒரு மாலை போதும் என அறிவிப்பு

ரோடுகளில் வீசப்படும் மாலைகளால் வாகனங்கள் விபத்துகளில் சிக்குவதை தவிர்க்க இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்த கிராம மக்கள் வினோதமான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளனர். அதன்படி ஒரே ஒரு மாலை மட்டுமே இறந்தவர்களுக்கு அணிவித்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்த வினோத கட்டுப்பாடு விதித்த கிராமம்- ஒரே ஒரு மாலை போதும் என அறிவிப்பு

KarthigaBy : Karthiga

  |  9 Dec 2022 6:30 AM GMT

இறந்தவர்களின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மலர் அஞ்சலி செலுத்துவது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். கண்ணீருடன் மலர்மாலையும் சேர்த்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது அந்த ஆத்மாவின் வானுலக பயணம் நல்ல முறையில் அமையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒவ்வொருவரும் தங்களுடைய பொருளாதார வசதிக்கு ஏற்றார் போல் ஆளுயர மாலை, ரோஜா பூ மாலை, துளசி மாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, நெல்மணிமாலை, வாசனை பொருட்கள் அடங்கிய மாலைகளை இறந்தவர்களுக்கு அணிவித்து அஞ்சலி செலுத்துவார்கள்.இந்த நிலையில் நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் 2ஆம் சேத்தி என்ற கிராமத்தில் உள்ள சாந்தான்வெளி அகரம் என்ற இரண்டு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களுக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக ஒரு வினோத முடிவை எடுத்துள்ளனர்.


அதன்படி கிராம மக்கள் சார்பில் 'ஒரே ஒரு மாலை மட்டுமே' இறந்தவர்களுக்கு அணிவித்து இறுதி சடங்கு செய்வது என்றும்,இறப்பு செய்தி அறிவிக்கும் போது மாலை கொண்டு வருவது தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பது என்றும் தீர்மானித்துள்ளனர்.இறந்தவர்களுக்கு அணிவிக்கப்படும் மாலைகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி இறுதி ஊர்வலத்தின் போது இந்த மாலைகளை பிய்த்து சாலை நெடுங்கிலும் வீசப்படுகிறது. இவ்வாறு வீசப்படும் மாலையில் சிக்கி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். மலர்மாலைகளால் ஏற்பட்ட விபத்தில் பல்வேறு இடங்களில் சிலர் இறந்துவிட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. மேலும் இறுதி ஊர்வலத்தின் போது இறந்தவரின் உடலில் அணிவிக்கப்படும் மமாலைகளை எடுத்து வீசும் போது அது ரோட்டில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மீதும் விழுவதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.


எனவே இது போன்ற இறந்தவர்களுக்கு அணிவிக்கப்படும் மாலைகளால் விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்காக 'ஒரே ஒரு மாலை போதும்' என்று அறிவிப்பை கிராம மக்கள் வெளியிட்டுள்ளனர். ஆயக்காரன்புலம் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு தொடர்பாக தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பலருடைய பாராட்டுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மாலைக்கு பதில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.200 வழங்கிடவும் அந்த தொகையில் இறுதி சடங்கு நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இறுதிச்சடங்கிற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து தவிர்க்கப்பட்டு ஏழை பணக்காரர் என்று ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை ஏற்படும் என கிராம மக்கள் கூறுகிறார்கள்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News