பாகிஸ்தானை வளையல் போட வைப்போம்- அணு ஆயுதங்களைக் கண்டு அஞ்சும் எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி !
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன பாகிஸ்தானை வளையல் போட வைப்போம் என்று பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
நான்காவது கட்ட நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்த நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூர், ஹாஜிப்பூர், சரண் ஆகிய மூன்று இடங்களில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பாகிஸ்தான் வளையல் அணிந்து கொண்டிருக்கவில்லை அணுகுண்டுகள் வைத்துள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் சமீபத்தில் கூறியதற்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி பேசியதாவது :-
இந்தியா கூட்டணி பாகிஸ்தானை பார்த்து பயப்படும் தலைவர்களை கொண்டுள்ளது .பாகிஸ்தானின் அணுசக்தி குறித்து கெட்ட கனவு கண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர்கள் கோழைகளாகவும் தைரியம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்கள். துல்லிய தாக்குதல் குறித்த சந்தேகம் எழுப்புகிறார்கள். அவர்களின் இடத்தை இடதுசாரி கூட்டாளிகள், அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பாகிஸ்தானிடம் உணவு தானியங்கள் இல்லை என்று எனக்கு தெரியும். மின்சாரம் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அந்நாட்டுக்கு போதுமான வளையல் சப்ளையும் இல்லை என்று இப்போதுதான் எனக்கு தெரியும். பாகிஸ்தான் வளையல் அணியா விட்டால் என்ன பாகிஸ்தானை வளையல் அணிய வைப்போம். நிதித்தட்டுப் பாட்டில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானை பார்த்து பயப்படும் பலவீனமான தலைவர்களிடம் நாட்டை ஒப்படைக்கலாமா? அவர்கள் வலிமையான நாட்டை கையால் ஆகாத நாடாக மாற்றி விடுவார்கள்.
இந்தியாவை முடித்து விட அவர்கள் காண்ட்ராக்ட் எடுத்து இருப்பார்கள் போலிருக்கிறது இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆண்டுக்கு ஒருவர் வீதம் ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் பதவியிவில் இருப்பதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கி வைத்துள்ளனர் .அவர்களின் திட்டம் வெற்றி பெற்றால் எவ்வளவு குழப்பம் ஏற்படும் என்று சிந்தித்துப் பாருங்கள். நல்ல வேலையாக அவர்கள் வெற்றி பெற போவதில்லை. இந்தியாவின் அந்தஸ்தையும் செல்வாக்கையும் மேலும் ஒரு படி உயர்த்தக்கூடிய அரசை உருவாக்கத்தான் இப்போது தேர்தல் நடக்கிறது. அரசியல்வாதிகளிடம் சோதனை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் ஏழைகளுக்கு சொந்தமானது. அதனால்தான் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பார்த்து அவர்கள் கூச்சலிடுகிறார்கள்.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க மாட்டோம் என்று எழுத்து மூலமாக உறுதியளிக்குமாறு காங்கிரஸ் கூட்டணிக்கு நான் சவால் விட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவை இன்னும் பதிலளிக்கவில்லை .பரம்பரை சொத்து வரி விதிக்கவும் திட்டமிட்டுள்ளன .ஆனால் அவர்களின் முயற்சியை முறியடிக்க மோடி சுவர் போல் குறுக்கே நிற்பார் .அயோத்தி ராமர் கோவில் பற்றிய அருவருப்பான கருத்துக்களை தெரிவித்து மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு காயப்படுத்துகின்றன. தேர்தலில் வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும். வலிமையான அரசு அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI