திருப்போரூர் கோவில் குண்டு வெடிப்பு ரபீக் என்பவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை!!
திருப்போரூர் கோவில் குண்டு வெடிப்பு ரபீக் என்பவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை!!
By : Kathir Webdesk
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ளது மானாம்பதி கிராமம். இங்கு சுமார் 100 ஆண்டுகள் பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குளம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தூர் வாரப்பட்டுள்ளது. கோவிலை புதுப்பிக்கும் பணிகளும் நடந்துள்ளன.
மானாம்பதி பாடசாலை தெருவில் வசித்து வந்த வாலிபர் திலீபன் தனது பிறந்த நாளையொட்டி நண்பர்களுடன் கோவிலின் பின்புறத்தில் உள்ள கோவில் குளம் அருகில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
இதில் அவரது நண்பர்களான சூர்யா, யுவராஜ், திருமால், விஸ்வநாதன், ஜெயராமன் ஆகிய 5 பேரும் பங்கேற்றுள்ளனர். கேக் வெட்டிய பிறகு திலீபன் உள்பட அனைவரும் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் அமர்ந்து இருந்த இடத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. கோவிலின் அருகில் வசித்துவரும் லட்சுமி என்ற பெண் சத்தம் கேட்டு உடனே வெளியில் ஓடி வந்தார். அப்போது 6 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி கிடந்தனர்.
அவர் கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை திரட்டினார். உடனடியாக மானாம்பதி கிராம மக்கள் அனைவரும் குண்டு வெடித்த பகுதிக்கு விரைந்து சென்றனர். உடனடியாக காயமடைந்த 6 பேரையும், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்த சூர்யா, ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உடல் சிதறி காயம் அடைந்த திலீபன், யுவராஜ், திருமால், விஸ்வநாதன், ஜெயராமன் ஆகிய 5 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திலீபனும் உயிரிழந்தார். பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடிய திலீபன் பிறந்த நாளிலேயே குண்டு வெடிப்பில் பலியான சம்பவம் அவரது பெற்றோரை மட்டுமின்றி மானாம்பதி கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
காயம் அடைந்தவர்களில் ஜெயராமனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் மட்டும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யுவராஜ், திருமால், விஸ்வநாதன் ஆகியோருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த ஒரு வாரமாக பரபரப்பு நிலவி வருகிறது. கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்ததால், இதில் பயங்கரவாதிகளின் சதி இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையை முடக்கி விட்டனர்.
ஐஜி, டிஐஜி முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். குண்டு வெடித்த குளத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டது.
இரு குண்டுகளையும் ஆய்வு செய்தபோது, அவை ராணுவ ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளின் பியூஜ் என்ற பகுதி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பியூஜ் பகுதி அங்கு வந்தது எப்படி என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ரபீக் என்பவர் மானாமதி கெங்கையம்மன் கோவில் குளத்தருகே இரும்புக் கடை வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று இரும்புப் பொருட்களை சேகரித்து வியாபாரம் செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
மானாமதி அருகே அனுமந்தபுரத்தில் ராணுவ பயிற்சி மையம் உள்ளதால், அங்கிருந்து ஏவப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் விழுந்திருக்கலாம் என்றும் அது என்னவென்று தெரியாமல் இரும்புக்கடை வியாபாரியிடம் யாராவது விற்றிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து ரபீகை போலீசார் தேடினர். ரபீக், குளத்தின் அருகே கடை வைத்திருந்த கடையை திடீரென மானாமதி காவல் நிலையம் எதிரே மாற்றி உள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சென்று பார்த்தபோது கடை பூட்டப்பட்டு இருந்தது. ரபீக் தலைமைறைவாகியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் ரபீக்கை போலிசார் கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட ரபீக்கை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.