₹3 கோடி மதிப்புள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிலம் மீட்பு!
₹3 கோடி மதிப்புள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிலம் மீட்பு!
By : Shiva V
கோவிலுக்கு சொந்தமாக சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்தக் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அவ்வப்போது ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பதும் அவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்பதும் தொடர்ந்து வருகிறது.
கந்தசாமி கோவிலுக்கு சொந்தமாக கோவிலின் தெற்கே உள்ள மாடவீதியில் சத்திரம் மற்றும் 20 சென்ட் காலி நிலம் உள்ளன. இந்த சொத்துக்கள் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, மயில் விளக்கு, தூங்கா விளக்கு ஆகிய கைங்கர்யங்கள் செய்வதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்திருந்தது.
இந்த கைங்கர்யத்துக்காக கோவில் நிர்வாக அதிகாரி அறக்கட்டளை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கான பணிகளை மேற்கொண்ட பொழுது இந்த சொத்துக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது. இதன்பிறகு ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியில் செயல் அலுவலர் தலைமையில் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தக் குழு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திவிட்டு முள்வேலி அமைத்து 'கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான இடம்' என்று அறிவிப்பு பலகையை வைத்துள்ளது. மீட்கப்பட்ட இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ₹3 கோடி என்று அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதோடு நின்றுவிடாமல் மீண்டும் அவை ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க தொடர்ந்து ஆய்வு செயீது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.