Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கும் தடையா? - தத்தளிக்கும் 50 ஆயிரம் குடும்பங்கள்!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கும் தடையா? - தத்தளிக்கும் 50 ஆயிரம் குடும்பங்கள்!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கும் தடையா? - தத்தளிக்கும் 50 ஆயிரம் குடும்பங்கள்!

Shiva VBy : Shiva V

  |  11 Nov 2020 3:00 PM GMT

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு கொரோனா ஊரடங்கு காரணம் காட்டி இந்த ஆண்டு தடை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இதனால் திருவண்ணாமலையில் உள்ள 50,000-க்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் ₹15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவண்ணாமலையில் மாதம் தோறும் நடக்கும் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள உணவகங்கள், டீக்கடை, மளிகை கடை, தள்ளுவண்டி வியாபாரிகள், தங்கும் விடுதிகள், பூக்கடை என பல்வேறு சிறு சிறு கடைகள் பல மாதங்களாக பூட்டிக் கிடக்கின்றன. இதனால் அங்கு 50,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கோவிலை ஒட்டிய பகுதிகளில் கடை வைத்துள்ளவர்களில் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் வெளியூர் வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் அடக்கம் என்பதால் அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

திருவண்ணாமலையின் உலகப் புகழ்பெற்ற கார்த்திகை மாத தீபத் திருவிழா வரும் 17-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். கார்த்திகை தீபத் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா கர்நாடகா என பல்வேறு அண்டை மாநில மக்களும் பகவான் ரமணரின் சீடர்கள்/பக்தர்களாக இருக்கும் வெளிநாட்டவர்களும் திருவண்ணாமலையில் கூடி கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல் தீபத் திருவிழா நடைபெறுமா என்று பக்தர்களும் வணிகர்களும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி தமிழக அரசு இத்திருவிழாவிற்கு தடை விதித்தால் ஒட்டுமொத்த வணிகர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கவலையோடு அரசின் உத்தரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகள் கூட திறக்கப்பட்டு தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவை கோயிலுக்குள்ளேயே எளிமையாக நடத்த அறநிலைத்துறை முடிவு செய்துள்ளதாக வந்துள்ள தகவலால் கிரிவலத்தை நம்பியிருக்கும் பல்வேறு வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் கிரிவலத்தை நம்பி உள்ளனர் என்பதால் நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் தீபத் திருவிழாவை நடத்துவதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என்றும் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவாமிக்கு சாற்றப்படும் பூமாலை மற்றும் அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்படும் பூக்களை விற்பனை செய்பவர்களில் தொடங்கி பிரசாதம் மற்றும் அன்னதானத்துக்கு காய்கறிகள், பழங்கள் சப்ளை செய்யும் உள்ளூர் விவசாயிகள் வரை கோவில் திருவிழாக்களை நம்பியே பெரும்பாலானோர் இருப்பதால் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு திருவிழாக்களை வழக்கம் போல் கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் வணிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. வியாபாரிகள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் அரசு தீபத் திருவிழாவை சிறந்த முறையில் நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News