Kathir News
Begin typing your search above and press return to search.

அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன்

அகத்தியர் தேரையர் சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதினால் தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை அப்படிப்பட்ட தோரணமலை முருகனின் சிறப்பு பற்றி காண்போம்

அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன்
X

KarthigaBy : Karthiga

  |  1 Feb 2023 2:45 AM GMT

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்பொதிகை மலையின் ஒரு பகுதியாக இருக்கிறது தோரணமலை. தேனினும் இனிய தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் கண்டு வியந்தமலை இது. யானை படுத்திருப்பது போல் காட்சி தருவதன் காரணமாக இந்த மலை முதலில் 'வாரணமலை ' என்று அழைக்கப்பட்டது.அதுவே தற்போது மருவி 'தோரணமலை' என்று வழங்கப்படுகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலையின் உச்சியில் உள்ள குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் எதிர்பார்த்து வருகிறார். சிவன் பார்வதி திருமணம் கைலாய மலையில் நடந்த போது அந்த திருமணத்தை காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்று அனைவரும் கைலாய மலையில் குவிந்தனர். இதனால் வடபகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்து உலகம் சமநிலை அடைவதற்காக அகத்தியரை தென்பகுதிக்கு அனுப்பினார் சிவபெருமான். அப்படி அகத்தியர் வந்தபோது அவரை கவர்ந்த இடம் இந்த தோரணமலை . இங்கு அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார் .


மண் முதல் விண்வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்ததால் தான் ஒருவன் முழு மருத்துவனாக முடியும் என்று கருதியை அகத்தியர் அதற்காக ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்களை வகுத்துள்ளார். அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியியல், மண்ணியல், கணிதவியல் மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின் படி பாடத்திட்டங்களை வகுத்தார். பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பது முதல் பாடமாக இருந்தது. தொடர்ந்து கணிதம், மருத்து ஆய்வு வகைகள் வான சாஸ்திரங்கள் இருநிலை பிரிவாகம் , மலை வாசகம், மூலிகை வாகடம், பாடான வாகடம், மூலிகை மூலதாரத்துவம் , ரசாயனாய்வு அதன் அனுபவ பயிற்சி, பாடான சித்தி முறை, அனுபான முறைகள், களிம்பாக்கம் , பற்பம், செந்தூரம், உலோக பற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரி நிலையில் தாவர சமூகங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.


தோரணமலை பயிற்சி கூடத்தில் பயில சித்தர்கள் பலர் வந்தனர். அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன. அகத்தியரும் அவரது சீடர் தேரையரும் தோரண மலையிலிருந்து தமிழ் கடவுளான முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர்கள் இருவரும் வழிபட்ட முருகப்பெருமான் தான் இன்றும் தோரண மலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தோரணமலை முருகன் கோவில் ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது . 1970 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் என்பவர் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பேற்ற பின் தோரணமலையின் புகழ் மாவட்டங்களுக்கு பரவியது.


இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது . அன்றைய தினம் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். முருகன் சன்னதி அருகே ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். தோரணமலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், குரு பகவான், பாலமுருகன், நவகிரகங்கள், சப்த கன்னியர்கள் ,கன்னி மாரியம்மன் சன்னதிகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் வருகிற ஐந்தாம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News