தாலிபான்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று மாவட்டங்கள்? - வலுக்கும் எதிர்ப்பு !
தலிபான் எதிர்ப்பு சக்திகளிடம் வீழ்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
By : Saffron Mom
ஆப்கானிஸ்தானில் உள்ள எதிர்ப்புப் படைகள் (Resistance Forces) தலிபான் கட்டுப்பாட்டில் இருந்து மூன்று மாவட்டங்களை விடுவித்துள்ளதாக ரிபப்ளிக் செய்திகள் தெரிவித்துள்ளது. பாக்லான் மாகாணத்தில் உள்ள பொல்-இ-ஹசர், தேஹ் சலா மற்றும் பானு மாவட்டங்கள் தலிபான் எதிர்ப்பு சக்திகளிடம் வீழ்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்பு சக்திகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தலிபான் தரப்பில் பலத்த சேதங்களுடன் கடுமையான மோதல்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானின் முக்கிய இராணுவத் தளபதி அஹ்மத் மசூதுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே தன்னை நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்தார். அரசியலமைப்பு விதிகளை மேற்கோள் காட்டி, அவர் தலிபான்களுக்கு எதிரான 'எதிர்ப்பில் சேர' மற்றவர்களை அழைத்தார்.
முன்னதாக, காபூலுக்கு வடக்கே உள்ள பர்வான் மாகாணத்தில் உள்ள கரிகார் பகுதியை சாலேவின் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. மார்ஷல் அப்துல் ரஷீத் தோஸ்தம் மற்றும் அட்டா முஹம்மது நூர் அதா நூர் ஆகியோரின் கட்டளையின் கீழ், ஆப்கானிஸ்தான் அரசுக்கு விசுவாசமாக இருக்கும் படைகள், பஞ்ஷிர் பகுதி முழுவதையும் கைப்பற்றுவதற்காக சாலேக்கு விசுவாசமான படைகளுடன் இணைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
தலிபான் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கும் ஒரே மாகாணமான பஞ்ஷிர், வடக்கு கூட்டணி (Northern Alliance) யின் எதிர்ப்புக் கொடியை மீண்டும் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. பஞ்ச்ஷீரின் "சிங்கம்" என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான் தலைவர் அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் தலைமையிலான ஒரு எதிர்ப்புப் படை காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் வலிமை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவும் தலிபான்களும் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக ஆப்கானிஸ்தான் அரசு எந்தவித ஆதாரவும் இல்லாமல் தனித்து விடப்பட்டது. எந்த தாலிபான்கள் அல்கொய்தாவிற்கு புகலிடம் வழங்கி அமெரிக்காவின் மீதான 2001 தாக்குதல் தொடுக்கப்பட்டதோ, அதே தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினர் எப்போதும் தலிபான்களின் துப்பாக்கி முனையில் இருந்தனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் கூட, தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது, அவர்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டு விடும் என்ற அச்சுறுத்தலிலேயோ உள்ளது.