Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து மூன்று சாமி சிலைகள் திருட்டு- மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மூன்று சாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து மூன்று சாமி சிலைகள் திருட்டு- மர்ம நபர்கள் கைவரிசை

KarthigaBy : Karthiga

  |  10 Dec 2022 4:00 AM GMT

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த புராதனவனேஸ்வர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையை ஆட்சித்துறை கீழ் இந்த கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு இன்னும் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. மேலும் திருப்பணி வேலைகளை எதிர்நோக்கி உள்ளதால் முக்கிய திருவிழாக்களும் நடைபெறாமல் உள்ளது. கோவிலின் பழமையான தேர் சிதலமடைந்ததை தொடர்ந்து புதிய தேர் அமைக்க கிராம மக்களின் பங்கு தொகை தமிழக அரசின் நிதி உதவியோடு தேர் அமைக்கப்பட அதுவும் இன்னும் வெள்ளோட்டம் விடப்படாத நிலையில் உள்ளது.


மேலும் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்து குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு தமிழக அரசு சமீபத்தில் ஒரு கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு உபயோதாரர்களால் உலோகத்தால் ஆன நடராஜர், அம்மன், சோமாஸ்கந்தர் சிலைகள் வழங்கப்பட்டன. இந்த சிலைகள் கோவையில் உள்ள நடராஜர் சன்னதியில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு இருந்தன. புயல் எச்சரிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலை பயன்படுத்தி நேற்று முன்தினம் இரவு கோவில் வலதுபுற சுற்றுச்சுவர் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் அவர்கள் நடராஜர் சன்னதியில் இருந்த இரும்பினால் ஆன கிரில் கேட்டுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று உள்ளனர் . பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த நடராஜர், அம்மன், சோமாஸ்கந்தர் ஆகிய மூன்று சிலைகளையும் திருடி சென்று விட்டனர். இதன் எடை சுமார் 45 கிலோ எனவும் இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


நேற்று காலை கோவில் பணியாளர்கள் கோவிலை திறந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சிற்றம்பலம் போலீசார் கோவில் முழுவதையும் சோதனை செய்தனர். அப்போது கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் ஆகியவற்றின் ஒயர்களை துண்டித்து விட்டு சிலைகளை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் அமுதா, பட்டுக்கோட்டை துணை போலீஸ் பிரித்திவிராஜ் சவுகான் ஆகியோர் கோவில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.


போலீஸ் மோப்பநாய் 'டபி' அங்கு வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து திருச்சிற்றம்பலம் கடைத்தெரு வரை ஓடிச் சென்று நின்றுவிட்டது. கைரேகை நிபுணர் அமலா கோவிலில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News