பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் மூன்றாண்டு சிறை: ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை
பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளார்.
By : Karthiga
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணம் உள்ளது. பல கிராமங்களில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும். பத்து ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது.
அதனை தொடர்ந்து பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் வர தொடங்கியது. இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து டிசைன் வாரியாக மாறுபட்டவை. அதிலும் முக்கியமாக ஒரு வகை பத்து ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் இருக்கும். மற்றொன்றில் இந்த சின்னம் இருக்காது. எனவே மக்கள் அதனை போலியான நாணயம் என நம்ப தொடங்கி விட்டனர். நாட்கள் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கியில் நிறுத்தப் போகின்றன என்றும் அவை செல்லாது என்றும் பல வதந்திகள் மக்களிடையே காணப்படுகிறது.
இது தொடர்பாக பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மக்களின் தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் விடுத்து அதனைப் பற்றிய தகவல்களை அளித்தது. மேலும் பத்து ரூபாய் நாணயம் பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 14440 என்ற கட்டணமில்லா சேவையை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. 14 வகை பத்து ரூபாய் நாணயங்களுமே செல்லும்.அவற்றை செல்லாது என கூறுவது அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவும் வாங்கவும் மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 124 a இன் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம். அந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறைதண்டனையும் அபராதமும் அளிக்கப்படும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI