Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்திய சிங்கம்: டி.என்.சேஷன் காலமானார் !

வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்திய சிங்கம்: டி.என்.சேஷன் காலமானார் !

வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்திய சிங்கம்: டி.என்.சேஷன் காலமானார் !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Nov 2019 4:57 AM GMT


சுதந்திர இந்தியாவில் டி.என்.சேஷன் அவர்கள் தேர்தல் ஆணையராக பணிக்கு வரும்வரை தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் வல்லவர்கள் வகுப்பதே சட்டமாக இருக்கும், அரசியல் கட்சிகளும், சாதி பெரும்பான்மையின் ஆணவம் கொண்டவரும் ஆங்காங்கு அதிகாரிகளை மிரட்டி, அடிபணிய வைத்து அல்லது அவர்களை வளைத்துப் போட்டு தேர்தலை தங்கள் இஷ்டம்போல நடத்துவது பெரும்பாலான இடங்களில் ஒரு அசிங்கமான வழக்கமாக இருந்தது, இந்த தவறான நடைமுறைகளில் இருந்து தேர்தல் கமிஷனை மீட்டு நியாயமான தேர்தலை நடத்த வழி ஏற்படுத்திய சிங்கம்தான் டி.என்.சேஷன்.


இவர் பொறுப்பேற்ற பின்தான் தேர்தல் கமிஷனின் வானளாவிய அதிகாரங்களை மக்களும், அரசியல்வாதிகளும் உணர்ந்தனர். முறைகேடான அரசியல்வாதிகளுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் சிம்ம சொபனமாக திகழ்ந்த டி.என்.சேஷன் அவர்களின் நடவடிக்கை பல ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டது. தேர்தல் ஆணைய வரலாற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆசியாவின் மிக உயர்ந்த மகசசே விருதுப்பெற்ற டி.என்.சேஷன் (87) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.


திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் சுருக்கமாக டி.என் சேஷன் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். 10 வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக 1991-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் 1996-ம் ஆண்டு டிசம்பர் 11 வரை பதவி வகித்தார்.


1932-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி (அப்போதைய நெல்லை மாவட்டம்) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், திருநெல்லையில் பிறந்தவர் டி.என்.சேஷன். இயற்பியல் பட்டதாரியான சேஷன், சென்னை கிருஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.


பின்னர் சிவில் தேர்வு எழுதினார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று 1955-ம் ஆண்டு அணியில் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1968-ம் ஆண்டு ஹார்வார்ட் பல்கலை கழகத்தில் பொது நிர்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.


100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் வாக்குச்சாவடிகளை கடைசி நேரத்தில் அரசியல்வாதிகள், சட்ட விரோதிகள் கைப்பற்றும் முறையை ஒழித்து, தேர்தலை மிக நேர்மையாகவும், கறாராகவும், கட்டுப்பாடாகவும் நடத்திக் காட்டினார்..


தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக்கினார், வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினார், வேட்பாளர்களை கட்டுப்படுத்துவது, தேர்தல் செலவை குறைக்கும் வேலையைச் செய்தார். தேர்தல் ஆணையத்தை தனித்துவமாக இயங்க வைத்தார். தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக்கியதன்மூலம் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.


வாக்குக்கு பணம், பிரச்சாரத்தில் மது விநியோகம், அரசு எந்திரத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது, மத, சாதி ரீதியாக வாக்காளர்களை பிரிப்பது, வழிபாட்டுத்தளங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது, கண்டபடி பொதுமக்களுக்கு இடையூறாக ஒலிபெருக்கிமூலம் பிரச்சாரம், அனுமதியின்றி பிரச்சாரம், இரவு 10 மணி தாண்டி பிரச்சாரம் அனைத்தையும் கட்டுப்படுத்தியதன்மூலம் அனைவரின் மதிப்பைப் பெற்றார்.


1997-ம் ஆண்டு கே.ஆர்.நாராயணனை எதிர்த்து குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஓய்வுக்குப்பின் சென்னை அடையாரில் மனைவியுடன் வசித்து வந்தார். அவருக்கு விஜலட்சுமி என்ற மனைவி உண்டு. குழந்தை இல்லை. கடந்த ஆண்டு அவரது மனைவி காலமானார். இந்நிலையில் நேற்றிரவு (10/11/19) சென்னை செயின்மேரிஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மரணமடைந்தார்.


தேர்தல் ஆணைய வரலாற்றில் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்து, கண்டிப்புடன் விதிகளை அமல்படுத்தியவர் சேஷன். இவர் தேர்தல் கமிஷன் சீர்திருத்த விவகாரங்களில் ஆதிசேஷனாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தந்த சம்பவங்களை இந்தியர்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு ஞாபகம் வைத்திருப்பார்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News