கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - மக்கள் வழிபட்ட புற்றை இடித்து நாகப்பாம்பைக் கொன்றதால் சோகம்!
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - மக்கள் வழிபட்ட புற்றை இடித்து நாகப்பாம்பைக் கொன்றதால் சோகம்!
By : Yendhizhai Krishnan
திருக்கழுகுன்றம் தண்டுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபட்டு வந்த பாம்புப் புற்றை ஆக்கிரமிப்பாளர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றியபோது அந்த புற்றில் இருந்த பாம்பு பலியானது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பாம்புகளை அகற்ற வனத்துறையினரை அழைக்காமல் பாம்பைக் கொன்ற ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே தண்டுமாரியம்மன் கோவில் 75 ஆண்டு காலமாக வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு பின்புறத்தில் சுயம்புவாக உருவான பாம்புப் புற்று ஒன்று உள்ளது. இந்த புற்றில் ஐந்துக்கு மேற்பட்ட பாம்புகள் இருந்ததாகவும் அந்தப் பாம்புகளை அப்பகுதி பொது மக்கள் வழிபட்டு வந்ததாகவும் அந்த ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த இந்த புற்று இருந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். அவர் அங்கிருந்த புற்றை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிப்பதாகத் தகவல் பரவியதும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவிலை முற்றுகையிட்டனர். புற்றை இடிக்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் ஆக்கிரமிப்பாளர் அதற்கு செவிமடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதில் வாழ்ந்து வந்த பாம்புகள் வேறு இடம் தேடிச் சென்று விட ஒரு நாகப்பாம்பு மட்டும் மாட்டிக் கொண்டு உயிரிழந்துள்ளது.இதையடுத்து கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக காவல் துறையினரிடமும் புற்றை இடித்ததற்காக வனத்துறையினரிடமும் பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை நடத்திய போது பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்ட புற்றின் அருகில் ஒரு நாகபாம்பு இறந்து கிடந்ததைக் கண்டனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பாளர் செந்தில் மற்றும் பொக்லைன் டிரைவரை வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவில் சொத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் மக்கள் தெய்வமாக வழிபட்டு வந்த நாகப் பாம்பைக் கொன்றது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினமணி