வசமாக சிக்கிய ஆன்லைன் சூதாட்டக்காரர் : மராட்டிய போலீசார் அதிரடி சோதனை- 17 கோடி ரொக்கம் 14 கிலோ தங்கம் பறிமுதல்
மராட்டிய போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் இருந்து 17 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
By : Karthiga
மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் ஆனந்த் என்ற சோந்து நவ் ரதன் ஜெயின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது ஜெயின் தொழிலதிபரிடம் ஆன்லைன் சூதாட்டம் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதற்கு தயக்கம் காட்டிய தொழிலதிபர் பின்னர் ஹவாலா மூலமாக ஒரு 8 லட்சத்தை ஜெயினிடம் அளித்துள்ளார்.
இதை அடுத்து தொழிலதிபர் பெயரில் ஆன்லைன் சூதாட்டம் கணக்கை திறப்பதற்கான ஒரு இணைப்பை வாட்ஸ்அப் மூலமாக ஜெயின் வழங்கினார். அந்த கணக்கில் தொழிலதிபர் பெயரில் ரூபாய் 8 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அந்த பணத்தை வைத்து தொழிலதிபர் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். தொடக்கத்தில் கிடைத்த வெற்றி மூலமாக அந்த விளையாட்டுக்கு அடிமையான தொழிலதிபர் கோடிக்கணக்கான பணத்தை சூதாட்டத்தில் வாரி இறைத்துள்ளார். ஆனால் தொடர் தோல்வியே அவருக்கு மிஞ்சியது.
இதன் மூலம் 58 கோடியை அவர் இழந்துள்ளார். தான் பெரும் நஷ்டம் அடைந்ததை உணர்ந்த தொழில் அதிபர் தனது பணத்தை ஜெயினிடம் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் ஜெயின் பணத்தை கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த தொழிலதிபர் இது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோல்டியாவில் உள்ள ஜெயின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம், தங்கம், வெள்ளிக்கட்டிகள் அதிக அளவில் சிக்கியது . அவரது வீட்டில் இருந்த ரூபாய் 17 கோடி ரொக்கம் மற்றும் 14 கிலோ தங்க கட்டிகள் 200 கிலோ வெள்ளியை போலீசார் கைப்பற்றினார்.
மேலும் ஜெயின் ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதற்கான ஆதாரமும் போலீஸிடம் சிக்கியது. இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்ததும் ஜெயின் வீட்டில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவர் துபாய்க்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
SOURCE:DAILY THANTHI